Thursday, November 22, 2012

நான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்தது)

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர். 

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது." 

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது." 

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன." 

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.
நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்." 

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.
மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.
-கலீல் ஜிப்ரான் 

( மொழிப்பெயர்ப்பு  யாரென்று தெரியவில்லை ,இணையத்தில் எப்போவோ படித்தது ..)


.பிரியமுடன் பிரபு 

1 comment:

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...