FROM
அது ஒரு கருணை இல்லம். விடிந்தால் அங்கு அத்தனை பேரும் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக அங்கு வாரத்திற்கு 5 பேர் வீதம் இறந்து வருகின்றனர். இருப்பினும் இறப்பு குறித்த பயமோ, துக்கமோ அவர்களிடம் இல்லை. அழுகை, துக்கம் எதுவுமின்றி அருகிலேயே அடக்கம் செய்து விட்டு அன்றாட வாழ்வை தொடர்கின்றனர். மறுநாள் அக்குழுவில் யாரோ ஒருவருக்கு மரணம் நிச்சயம். இருப்பினும் எவ்வித சலனமும் அவர்களிடம் இல்லை. ரத்தத்தை உறைய வைக்கும் திகில் கதை போலிருந்தாலும் இந்த நிகழ்வுகள் நித்தமும் நிகழ்ந்து கொண்டிருப்பது அக்மார்க் நிஜம். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில்....
பேராசை, இரக்கமின்மை, மறைந்து போன மனிதநேயம் என்று ஆறாவது அறிவு ஜீவிகளின் தடம்மாறுதலின் உச்சக்கட்ட கொடூர நிகழ்வு அது. நெஞ்சத்தை பதற வைக்கும் அந்த இல்லவாசிகளின் ‘கடைசித் தருணம்’ நெஞ்சத்தை பிழிய வைப்பன. வாசகர்கள் இந்த எழுத்தின் வழித்தடம் வழியே அந்த இல்லத்திற்கு நுழைந்தால் இதயம் பதறித் துடிக்கும். கண்ணீர் பெருக்கெடுக்கும்....
நாம் செல்ல இருப்பது பூட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல். அங்கிருந்து மதுரைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ளது கொடைரோடு. அதற்கு 4 கிமீ. முன்னதாக ஜல்லிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளதுதான் அந்த புனித சூசையப்பர் கருணை இல்லம். முதியோர் இல்லம் என்று வழக்குச் சொல் அதற்குண்டு. அதுவல்ல நிஜம். மனநோய், முதுமை, குணப்படுத்த முடியாத வியாதிகளால் உறவுகளுக்கு சுமையாகி அனாதைகளாக்கப்படும் வாழ்வின் ‘கடைசித் தருணத்தில்’ இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி.
2006ல் துவங்கப்பட்ட இந்த இல்லத்தில் இதுவரை 826 பேர் இறந்திருக்கிறார்கள். சிலருக்கு மரணம் சில மாதங்களில்... சிலருக்கு வாரம்... இன்னும் சிலருக்கோ நாள்கணக்கில்.... என்று பாதிப்பின் தன்மைக்கேற்ப மரணத்தின் அளவுகோல் இருந்திருக்கிறது. வந்த சில மணி நேரத்திலே மரணித்தவர்களும் உண்டு. 324 படுக்கைகள் இங்கு உள்ளன. மரணத்திற்கு மிக அருகில் உள்ளவர்கள், மரணத்திற்கு சற்று தூரத்தில் உள்ளவர்கள் என்று கணக்கிட்டு இவர்களுக்கு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. நடக்கவே முடியாதவர்களுக்கு தனி வார்டு.
பறித்து உண்ண ஒரு பழத்தோட்டம்
|
சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட ஏராளமான மரங்கள் நோயாளிகள் பறித்துத் தின்பதற்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆனால் திருட்டுத்தனமாக இவற்றைப் பறித்து மரங்களுக்கு அடியில் ஒளித்து வைப்பதும், தலையணைக்குள் பதுக்கி வைப்பதும் வயதான குழந்தைகளாகவே பார்வைக்குத் தெரிகின்றனர்.
|
இங்குள்ள பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை உறவுகள் ரயிலில் பல நாட்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்டுச் சென்றுள்ளனர். (சொந்த மாநிலம் என்றால் மொழி தெரிந்து வீட்டிற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாம்). மனநலம் பாதித்து, உடல் உபாதையுள்ள இவர்களிடம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று இங்குள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் எல்லாம் பேசியும் இவர்களுடைய விபரத்தை.. ஏன்.. அவர்களின் பெயரைக் கூட கடைசி வரை அறிந்து கொள்ள முடியாமல் போனதும் உண்டு. இது போன்றவர்களுக்கு இந்த இல்லத்தில் புதிய பெயர் சூட்டப்படுகிறது.
இல்லத்திற்கு முதலில் வந்ததுமே மொட்டை போடப்படுகிறது. பின்பு அவர்கள் அணிந்திருக்கும் கிழிந்த, கசங்கலான ஆடைகள் எரிக்கப்படுகின்றன. இவர்களை குளிக்க வைத்து புதிய ஆடை வழங்கி, உடல், மன நலத்தின் தன்மைக்கேற்ப வார்டு ஒதுக்கப்படுகிறது.
குப்பைத் தொட்டி, சாக்கடை, துர்நாற்றம் வீசும் இடங்களில் சுருண்டு கிடந்தவர்களுக்கு இந்த மாற்றம் மாறுதலாக இருக்கிறது. சாப்பாட்டைப் பொறுத்தளவில் காலையில் காபி, டிபன், மதிய சாப்பாடு, மாலையில் காபி, சிற்றுண்டி, இரவுச் சாப்பாடு, வாரத்தில் 2 நாள் இறைச்சி உணவு. 4 நாள் முட்டை என்று என்று சத்தான ஆகாரமாகப் பார்த்து பார்த்து பரிமாறப்படுகிறது. காலை சாப்பாட்டிற்குப் பிறகு இங்குள்ள பூங்காவிற்கு மெல்லமாய் ஊழியர்கள் அழைத்துச் செல்கின்றனர். அருகிலேயே ஓய்வறை. அங்கு பகல் முழுவதும் டிவி.இயங்கிய வண்ணம் உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் பெரிய திரையில் சினிமா.
பலரும் படுக்கையையே கழிப்பிடமாக்கும் நிலை அதிகம் இங்குண்டு. எவ்வளவு சுத்தம் செய்தாலும் கைக்குழந்தைகள் போன்றே தொடரும் இந்நிலையினால் துர்நாற்றத்தைப் போக்க காற்றோட்டமாக இருக்கும் வகையில் பல அறைகள் கிரில்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியாட்களைப் பார்த்ததும் சார், ஐயா, வாங்க... ஙஙஙங... என்று அவர்களுக்குத் தோன்றும் வார்த்தைகளால், ஓசைகளால் கையை ஆட்டிக் கொண்டு நம்மை நோக்கி வருகிறார்கள். சிலர் போட்டோ கொடுங்க என்கிறார்கள்.... சிலர் மனநிலை பிறழ்வில் மதிலைப் பார்த்து வாழ்வில் நடந்த விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிறுவயதில், வாலிபவயதில், திருமணவாழ்வில், குழந்தைச் செல்வங்களுடன் என்று அவர்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் ‘தற்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்’ கருதி உறவினர்களின் பெயரையும் அழைப்பதும், அங்கும் இங்கும் சென்று பாவனை செய்வதும் பார்ப்பவர்களை கண்ணீர் மல்கச் செய்கிறது. இந்த இல்லத்திற்குள்ளே முடிந்து போன சோகக்கதைகள் ஏராளம். அதையெல்லாம் கேட்டால் மனம் பதறித் துடிக்கும்.
அவற்றில் சில.... இறக்கும் நிலையில் உள்ள அனாதைகள் மட்டுமே இங்கு சேர்க்கப்படுவார்கள். இதை அறிந்த ஒருவர் மனநிலை பாதிப்புடன் உடல்நிலைமோசமான தனது தந்தையை அனாதை என்றும், ரோட்டோரத்தில் கிடந்தார் என்று கூறி சேர்த்துச் சென்றுள்ளார். தந்தையோ, தனது மகன் வருவான் என்று புலம்பியபடி இருந்தவர் 2வது நாளில் அந்த நினைவுகளுடனே இறந்து போனார்.
திருச்சிக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர் அந்த பெண். கணவன், 2 குழந்தைகளுடன் இருந்தவருக்கு புத்திபேதலித்தது. துரத்தப்பட்ட அவரை சில சமூக ஆர்வலர்கள் இங்கு சேர்த்தனர். மருந்து, பராமரிப்பு என்ற இருந்த இவருக்கு ஒருகட்டத்தில் பழைய நினைவு திரும்பியது. ஒருகட்டத்தில் தனது சொந்த ஊர், குடும்பம் குறித்து தெளிவாக கடகடவென சொல்லியதைக் கண்டு இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி... இந்த இல்லத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் செல்லும் இடம் கல்லறையாகத்தான் இருந்திருக்கிறது. வித்தியாசமான ஒரு நபரைக் கண்டதும் பாதர் தாமஸ் உதவியுடன் ஒரு குழு தனிவாகனத்தில் திருச்சி நோக்கி பயணித்தது. ஊர், வழியிடை விபரங்களை மிகச் சரியாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். வீட்டை நெருங்கியபோது அந்த மாறுபாடு தெரிந்திருக்கிறது. தனது குழந்தைகள் தாய் வீட்டில் வளர்வதாகவும்... தனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் அருகில் உள்ளவர்கள் தயங்கிக் கொண்டே சொல்ல... அரற்றியபடி விழுந்தவர்தான். மீண்டும் எழுந்தபோது அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இல்லத்தின் ஒர் மூலையில் தனது எஞ்சிய நாட்களை கடத்தி வருகிறார்.
வெறித்த பார்வை.. பரிதவிக்கும் மனசு..
|
ஆண்களைப் பொருத்தளவில் திக்கற்ற தனது கடைசித் தருணத்தைக் கண்டு மனம் இறுகிப்போய் வெறித்த பார்வையுடனே அவர்களின் வாழ்வு முடிகிறது. பாவம் பெண்களால்தான் இந்தநிலையை எதிர்கொள்ள முடியவில்லை. பழைய வாழ்க்கையை, உறவுகளை நினைத்து இறக்கும்வரை புலம்பிக் கொண்டே இருக்கின்றனர் என்கிறார்கள் இங்குள்ள ஊழியர்கள்.
|
நிறுவனர் இயக்குனர் தாமஸ் ராத்தபிள்ளில் கூறுகையில், இங்குள்ளவர்களில் 35 சதவீதம் பேர் இயற்கை உபாதையை அடக்க இயலாதவர்கள். இவர்களுக்காக சிறப்பு வார்டு உள்ளது. பகலில் இவர்கள் உலாத்தும் பகுதிகளில் ஆங்காங்கே கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நடமாட முடிபவர்களுக்கு புல் பறித்தல், நீர் பாய்ச்சுதல், ஒட்டடை அடித்தல் உள்ளிட்ட சிறு வேலைகள் தருவோம். இது மருத்துவமனை கிடையாது. அதனால் இங்கு எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. 2 வாரத்திற்கு ஒருமுறை டாக்டர் வந்து சோதித்து மருந்து, மாத்திரை வழங்குகின்றனர். நர்சிங் முடித்த 6 பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்கள்தான் இதரநாட்களில் நோயாளிகளை கவனித்துக் கொள்கின்றனர்.
சாவின் விளிம்பிற்கு வந்தவர்களின் அறிகுறி எங்களுக்குத் தெரிந்து விடும். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கடைசி நேர பணிவிடை செய்வோம். இறந்தது தெரிந்ததும் காடா துணியில் சுற்றி அருகில் உள்ள கல்லறைக்குச் சென்று விடுவோம். அங்கு மும்மத பிரார்த்தனை நடைபெறும். பின்பு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்வோம் என்றார்.
இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை இங்கு வித்தியாசமாக இருக்கிறது. மேலிருந்து கீழாக 3 அடுக்குடனும், படுக்கை வசத்தில் 15 வரிசைகளுடனும் இந்த கல்லறை அமைந்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 45 பேரை தகனம் செய்ய வசதியுள்ள ‘அடுக்கு கல்லறை’ அது. கல்லறையின் தரைமட்டத்திற்கு கீழே 35 அடி ஆழம். ஒவ்வொரு அடுக்கும் 10 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் கீழ்நோக்கி சாய்வாக 6 அடி தளம்(இறந்தவர்களை படுக்க வைக்க) உள்ளது. காற்று, நீர் புக முடியாத வகையில் இவை முற்றிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை இந்த அடுக்கின் சாய்தளத்தில் படுக்க வைத்த நிலையில் வைத்து வெளிப்புறம் பூசிவிடுவார்கள். ஒரு வாரத்திற்குள் உடல் அழுகி சாய்தளத்தில் மெல்ல.. மெல்ல... சரிந்து 35 அடி ஆழத்தில் விழுந்து மக்கி.. எலும்புகளாகி விடுகிறது. அதிகம் இறப்பு ஏற்படும் பகுதி என்பதால் வித்தியாசமான முறையில் இந்த கல்லறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளனர். இறந்தவர்கள் குறித்த தகவல் கிராம நிர்வாக அலுவலரிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
பாதர் ஜார்ஜ் கூறுகையில், மனிதனின் கடைசி தருணம் வசந்தமாக இருக்க வேண்டும். சாக்கடை, குப்பை, துர்நாற்றத்துடன் அவனின் முடிவு இருக்கக் கூடாது என்பதால் இந்த மையத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த வாட்கின்ஸ் என்ற பெண்மணி துவக்கினார். தற்போது காலை உணவிற்கு ரூ.4 ஆயிரம், மதிய உணவிற்கு ரூ.8 ஆயிரம், இரவு உணவிற்கு ரூ.2 ஆயிரம், மருத்துவ வசதிக்கு நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது. மூலதனமில்லாமல் சமூக ஆர்வலர்களை நம்பியே இந்த மையம் இயங்கி வருகிறது. பிறந்தநாள், திருமணம், விசேஷநாட்களில் ஆடம்பரங்களைத் தவிர்த்து இது போன்றவர்களுக்கு உதவினால் அது இறைவனுக்கே செய்யும் தொண்டு ஆகும். இந்த இல்லம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் 93603 76678, 94420 30354, 99762 11721 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
வாரத்திற்கு 5 இறப்பாவது இங்கு நிகழ்கிறது. இறப்பு, அருகில் உள்ளவர்களைப் பாதிக்கும் என்பதால் உடனுக்குடன் சடலத்தை அகற்றிவிடுகின்றனர். இருப்பினும் பக்கத்து படுக்கையில் உடல் செயலற்று, பாதிக் கண் திறந்துள்ள நிலையில் உள்ள நோயாளியின் மனதில் என்னவோ இன்று நீ... நாளை நான்... என்ற எழும் எண்ண ஓட்டம் நம் நெஞ்சைப் பிசைகிறது.
குடும்பத்திற்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள் நோய் வாய்ப்பட்டதும் குப்பையைப் போல அவர்களை ரோட்டில் தூக்கில் வீசும் அவலம் எந்த ஜீவராசிகளிடமும் இல்லாதது.சாவு நெருங்கியவர்களுக்கான அறையை கனத்த மனதுடன் சென்று பார்த்தபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பேதலித்த புத்தியுடன் வெறித்த பார்வையுடன் அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில்தான் ஆயிரமாயிரம் ஈட்டிகள்... மனித சமுதாயத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் தருணம் அது. செவ்வாயை எட்டியாயிற்று... விண்வெளியில் உள்ள ஓடத்தை இங்கிருந்தே பழுது பார்த்தாயிற்று... லட்சக்கணக்கான கிமீ. தூரத்தில் காற்று, தண்ணீர் இல்லாத இடத்தில் மாதக்கணக்கில் இருந்து சாதனை செய்தாயிற்று... ஆனால் மனிதநேயத்தில் ‘கீழ்நோக்கிய’ இந்த அசுர வளர்ச்சி மனித சமுதாயத்தையே தலை குனியவைக்கிறது.
கட்டுரை முடிவடையும் நேரத்தில் கருணை இல்லத்தில் இருந்து போன். ‘சார்..! நைட்டியோட ஒரு வயசான அம்மா... தடுமாறி தடுமாறி நடந்தாங்களே... வணக்கம் கூட சொன்னாங்களே.. அவங்க இப்போ இறந்திட்டாங்க...!’அந்த பெண்மணி நம்மை நோக்கி ஏதோ சொல்ல வருவதும், தெரியாமல் நாம் விழித்ததும் மெல்ல நினைவிற்கு வருகிறது. ‘இறப்பை உணர்ந்து’ போய் வருகிறேன் என்று சொல்லியிருப்பாரோ.. அடுத்த முறை அங்கு சொல்கையில் யார் யார் இருப்பார்களோ...! என்ன முயன்றும் வழிந்தோடும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை.. வளரட்டும் மனிதநேயம்.. வேண்டாம் இது போன்றதொரு இல்லம்.
+++++++++++++++++++++++++++++
கட்டுரை, படங்கள்: கலிவரதன்
.
ப்ச்.............. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சுங்க.
ReplyDeleteமேற்கண்ட இல்லத்துக்கு நன்கொடை அனுப்ப ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருந்தால் சொல்லுங்க.
மேற்கண்ட இல்லத்துக்கு நன்கொடை அனுப்ப ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருந்தால் சொல்லுங்க.
ReplyDeleteஆம் , மேலதிக விபரம் தரவும்.
மனித நேயம் கிலோ எத்தனை ரூபாய்? நெஞ்சம் கனக்கின்றது. மானுடம் மறைந்து வெகு காலமாயிற்றோ?
ReplyDeleteதுளசி கோபால் & யோகன் பாரிஸ்(Johan-Paris)
ReplyDeleteபதிவிலேயே முகவரி மற்றும் கைபேசி எண்கள் இருக்கு .மேலும் தகவல்கள் கிடைத்தால் சொல்கிறேன் ..