சிங்கப்பூரில் நடந்த கலவரம் பற்றி விபரம் தெரியாமல் எழுதியவர்கள் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..
நன்றி
சிங்கப்பூரில் நடந்த கலவரம் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்து இருக்கும். என்ன நடந்தது என்று தெரியாமல் அவசரத்தில் தவறான தகவல்களை கொடுத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையே, இவ்வளவு நாள் எழுதாமல் இருந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். கட்டுரை பெரியது எனவே, உங்களுக்கு நேரம் இருக்கும் போது படிக்கவும். Image Credit – www.businesstimes.com.sg
கலவரம் நடந்தது தொடர்பாக செய்திகளையும், காணொளிகளையும் ஏற்கனவே நீங்கள் படித்து / பார்த்து இருப்பீர்கள். திரும்ப அதையே கூறி உங்களை சலிப்படைய வைக்க விருப்பமில்லை. அதோடு அந்த விபத்து எப்படி நடந்தது என்று இன்று வரை உறுதியாக தெரியவில்லை, இதற்கு என அமைக்கப்பட்டுள்ள குழு ஆராய்ந்து கூறிய பிறகே இது பற்றி விரிவாகத் தெரிய வரும்.
இது பற்றி தெரியாதவர்களுக்கு சுருக்கமாக, ஒரு தொழிலாளி பேருந்தில் அடிபட்டு இறந்ததால், அங்குள்ளவர்கள் வன்முறையில் இறங்கினர், பின் அது கலவரமாகி விட்டது.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் அதிகம், கடுமையான விதிமுறைகள் உண்டு என்பது எவருக்கும் தெரியும். இது பற்றி நன்கு தெரிந்த இங்கேயே உள்ள தொழிலாளர்கள் எப்படி இது போல வன்முறையில் இறங்கினார்கள் என்பது தான், பலரின் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது.
எனக்கு தெரிந்த சில காரணங்கள்
முதல் காரணம் குடி. மதுபானம் அருந்தி இருந்தாலே மூளை வழக்கமான முறையில் சிந்திக்காமல் ஆக்ரோசத்தைக் காட்டும் அல்லது இயல்பாக சிந்திக்க விடாது. “நானெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்” என்று கூறுபவர்கள் கூட 100% வழக்கமான நேரத்தில் இருப்பதை விட இந்த நேரத்தில் குழப்பமாகவும் சாதாரண மன நிலையில் இருந்து விலகியும் இருப்பார்கள். குறிப்பாக விவாதம் என்று வந்தால் இதில் உள்ள வித்யாசத்தை அறிய முடியும்.
இந்த நிலையில் அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இருக்கும் போது, போதையின் வீரியமும் சேர்ந்து கூடுதல் (குருட்டு) தைரியத்தை கொடுத்து இருக்கும். இதை செய்யும் போது இதனால் அவர்களுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகள் பற்றி எதுவும் புரியும் நிலையில் அவர்கள் மூளை செயல்படாது ஆனால், எல்லாம் முடிந்து தெளிந்து நாம் காவல்துறை வசம் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்த பிறகு, அவர்களின் பயம் வாழ்க்கையில் இது வரை எப்போதும் அனுபவித்து இராத அளவிற்கு இருந்து இருக்கும். இதை என்னால் 100% உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் சிங்கப்பூரில் தண்டனை முறைகள் அப்படி!
யாருக்காகவும் இந்த விசயத்தில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவையெல்லாம் இல்லாமல் இருந்தால், நிச்சயம் நாட்டை இவ்வளவு சிறப்பாக வைத்து இருந்து இருக்க முடியாது. இதற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் பிரம்படிகளும் கிடைக்கும். எல்லாம் தெளிந்த பிறகு இந்த விசயங்களும், தங்களின் குடும்ப நிலையும் மனக் கண்ணில் வந்து இருக்கும். அப்போது தான் நினைத்து இருப்பார்கள்… தாம் எவ்வளவு பெரிய மிக மோசமான தவறை செய்து இருக்கிறோம் என்பது. காலம் கடந்த சிந்தனை.
உங்களுக்கு, பிரம்படி கொடுப்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா? நான் ஒருமுறை மலேசியாவில் கொடுத்த பிரம்படியை காணொளியில் பார்த்தேன். தண்டனை பெறப் போகிறவருக்கு பின் பக்கம் மட்டும் திறந்து இருக்கும் படி, உடை அணிந்து இருந்தார்கள் [உள்ளாடை கிடையாது]. புரியும் படி கூறுவதென்றால், அறுவை சிகிச்சை செய்யும் போது குறிப்பிட்ட பகுதி மட்டுமே திறந்து இருக்கும் அல்லவா! அது போல.
அசையாமல் இருக்க, முன்பக்கம் அவர் கையை ஒரு கம்பத்துடன் கட்டி விட்டார்கள். பின்னர் ஒருவர் பிரம்பை எடுத்து புட்டத்தில் ஒரு விளாசு! அடுத்த நொடி அந்த இடம் தோல் பிஞ்சு உள்ளே இருந்த வெள்ளைத் தோலே தெரிகிறது. அவர் உடல் நடுங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஒரு அடிக்கே இந்த நிலை.. இது தொடர்ந்தால் அவரின் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரிலும் கிட்டத்தட்ட இதுபோலத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த விஷயங்கள் அனைத்தும் கைது ஆனவர்கள், காவல்துறையிடம் மாட்டி தெளிந்த பிறகு அவர்களது மனத் திரையில் ஓடி இருக்கும். கைது ஆனவர்கள் அனைவரும் இதை எதிர்கொள்ளப் போகிறார்கள்.
இரண்டாவது காரணம் இங்குள்ள பல தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது வெகு குறைவு. இதில் இவர்கள் ஏதாவது தவறு செய்யும் போது அபராதம் விதிக்கப்பட்டால், சில நேரங்களில் அவர்களது மாத சம்பளமே கொடுக்க வேண்டிய அளவிற்கு வரும். ஒரு சிலர் மாதமே 500 – 800 வெள்ளி சம்பாதிக்கிறார்கள். இது போன்ற சிறிய கோபங்கள் இந்த இடத்தில் பிரதிபலித்து இருக்கலாம். ஏனென்றால், காவலர்கள் மீது இவர்கள் அனைத்தையும் தூக்கி எறிந்த போது அவர்கள் ஒதுங்கி ஓடியதால், தங்களில் ஒருவன் இறந்து இருக்கிறான் என்ற சோகத்தையும் மீறி சிரித்துக்கொண்டு விசிலடித்துக்கொண்டு இருந்தார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது?!
மூன்றாவது மன அழுத்தம். கடுமையான வேலை, ஓய்வு என்பது குறைவு, நமது மனதை வேறு வழியில் திருப்ப முடியாமை. வீட்டில் இருந்து பண நெருக்கடி, திருமணம், குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, வேலை செய்யும் இடத்தில் நெருக்கடி போன்ற காரணங்கள் மேலும் தூண்டி இருக்கலாம்.
ஆனால், இவை எந்தக் காரணமும் இந்தக் கலவரத்தை நியாயப்படுத்தி விட முடியாது. வேறு எந்த நாடும், சிங்கப்பூர் போல தொழிலாளர்களுக்கு இவ்வளவு சுதந்திரத்துடன் / சலுகைகளுடன் இருக்குமா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அங்குள்ளவர்கள் மோசமாக நடந்து கொண்டு இருக்கலாம் ஆனால், அரசாங்கம் இன்று வரை அது போல நடந்து கொண்டதில்லை. எங்காவது சில தவறுகள் நடக்கலாம் அது இயல்பு.
ஏன் சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்?
சிங்கப்பூரில் புதிய கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதற்கு உள்ளூர் மக்கள் போதாது. அதோடு சுத்தம் செய்வது, சாலை அமைப்பது போன்ற கீழ்மட்ட வேலைகளை செய்ய ஆட்கள் போதவில்லை அல்லது இங்குள்ளவர்கள் இவற்றை செய்ய தயாராக இல்லை. உள்ளூர் மக்கள் இது போன்ற பணியில் ஈடுபட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், Benefits அதிகம். இது ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவை கொடுக்கிறது எனவே, வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்துகின்றனர். புரியும்படி கூறுவதென்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் வந்து தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கின்றன? இதை புரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.
அதிகளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கே இருப்பதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை இதற்கு நியாயமான காரணங்கள் உண்டு ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு வெளிநாட்டு ஆட்கள் தேவை. எனவே இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை / மற்ற பிரிவினரை எடுப்பதையும் குறைத்துக்கொண்டு வருகிறது. இது பற்றி ஒரு பத்தியில் கூற முடியாது.
இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதி என்பது இந்தியர்கள் வசிக்கும் பகுதி என்று கூறக் கூடாது. இந்தியர்கள் பெரும்பான்மையோர் வர்த்தகம் செய்யும் இடம் என்பது தான் சரி. காரணம் சிங்கப்பூரில் பல இனத்தவரும் வசிக்கிறார்கள். எனவே குறிப்பிட்ட ஒரு இனத்தவரை மட்டும் குறிப்பிட்ட பகுதியில் சேர அனுமதிக்காது காரணம், குழு சேர்ந்தாலே அங்கு பிரச்சனை வரும். எனவே ஒரு அரசாங்க குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு இனத்தவர் இவ்வளவு அளவில் தான் இருக்க முடியும் என்று உத்திரவே இருக்கிறது. இருந்தும் லிட்டில் இந்தியாவில் மற்ற இடங்களை ஒப்பிடும் போது இந்தியர்கள் கூடுதலாக வசிப்பதாக நினைக்கிறேன்.
இங்கே ஒரு பிரச்சனை உள்ளது. பெயர் தான் லிட்டில் இந்தியாவே தவிர இங்கு அனைத்து தெற்கு ஆசியா மக்களும் இருப்பார்கள். நம்மைப் போல பங்களாதேஷ் நாட்டினரும் அதிகளவில் இருக்கிறார்கள். பார்க்க இவர்களும் நம்மைப் போலவே இருப்பதால், இவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் அது நம்ம கணக்கிலேயே வைக்கப்படும். யார் என்ன செய்தாலும் பெயர் லிட்டில் இந்தியா என்பதால் அது இந்தியர்கள் செய்தது என்று தான் அறியப்படும். நல்லது நடக்க வாய்ப்பில்லை எனவே, இது நமக்கு ஒரு பின்னடைவு.
சிங்கப்பூர் அரசாங்கம் இந்த இடங்களில் ரொம்பக் கட்டுப்பாடு செய்யாமல் மக்களை சுதந்திரமாகவே விட்டு இருக்கிறது. வார இறுதியில் (ஞாயிறு மாலை) தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களை, உறவினர்களை காண, சாப்பிட, பொருட்கள் வாங்க என்று குழுமுவது வழக்கம். இந்த சமயத்தில் மதுவும் நிச்சயம் இருக்கும். எங்கே வேண்டும் என்றாலும் குடிக்க அனுமதி உண்டு. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு இதனால் சிரமங்கள் ஏற்பட்டது.
இவர்கள் குடித்து விட்டு வாந்தி எடுப்பது, சத்தம் போடுவது, கிண்டலடிப்பது என்று புகார்கள் வந்ததால், இரண்டு வாரம் முன்பு தான் இது குறித்து பரிசீலித்து திறந்த வெளிப் பகுதியில் குடிப்பதை தடை செய்ய முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படப் போவதாகக் கூறினார்கள். நம்முடைய கெட்ட நேரம் இந்த சம்பவம் அதற்குள் நடந்து விட்டது . ஒருவேளை அது செயல்படுத்தப்பட்டு இருந்தால், இந்த சம்பவம் நடக்காமல் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்தக் கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் அந்த பேருந்தில் ஒரு பெண்ணும் இருந்தார், இவர்கள் கலாட்டா செய்ததால் பெண் நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்து கதைவை உள் புறமாக தாளிட்டுக் கொண்டார்கள். ஒருவேளை இதை செய்யாமல் இருந்து, குடி போதையில் இந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து இருந்தால், ஐயோ! நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்தப் பேரும் நாறி இருக்கும். ஏற்கனவே பாலியல் வன்முறையில் நம் பெயர் கெட்டு கிடக்கிறது. குடித்து இருந்ததால் யாரும் சுய புத்தியில் இருந்து இருக்க மாட்டார்கள். நல்லவேளை இது போன்ற சம்பவம் நடக்கவில்லை.
ஒரே ஒரு மணி நேர மதியிழப்பு ஒருவரை தீரா துன்பத்தில் ஆழ்த்தி விட்டது, யோசிக்காமல் நடந்து கொண்டதால் எவ்வளவு பெரிய இழப்பு! 7 வருடம் சிறை, பிரம்படி. இனி இவர்களின் குடும்பம் எதிர்நோக்கும் அவமானங்கள், பிரச்சனைகள் எத்தனை? பாதிக்கப்பட்டவர்களின் இளமை இனி திரும்ப வருமா! கைதானவர்கள் பெரும்பாலும் தோராயமாக 26 – 32 வயதில் இருக்கிறார்கள். இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் கோபம், உணர்ச்சி வசப்படுதல் அதோடு குடி.
இந்த சம்பவத்தால் சிங்கப்பூரில் மற்ற இனத்தவர் இந்தியர்களை கேவலமாக இணையத்தில் திட்டிக்கொண்டுள்ளார்கள். இதில் குறை காண முடியவில்லை. இவர்கள் நிலையில் நான் இருந்தாலும் இதையே செய்து இருப்பேன் ஆனால், தொழிலாளர்களுக்கு ஆதரவாக எண்ணற்ற சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக facebook ல் பக்கம் துவங்கி தொழிலாளர்கள் பற்றிய நல்ல செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஒரு சிலர் செய்த தவறுக்காக அனைவரையும் தவறாக பேசக் கூடாது என்று அனைவருக்கும் எடுத்துக் கூறி வருகிறார்கள்.
ஒரு தொழிலாளர் கூறும் போது (ஒலி பண்பலை செய்தி) “நான் மாதத்திற்கு ஒரு முறை தான் லிட்டில் இந்தியா பகுதி தான் வருகிறேன் (ஊருக்கு பணம் அனுப்ப). இந்த சமயத்தில் நண்பர்களை பார்த்து பேச முடிகிறது. ஒரு சிலர் செய்த தவறால் எங்கள் அனைவருக்குமே கெட்ட பெயர் ஆகி விட்டது. இது நடந்து இருக்கக் கூடாது” என்று வருத்தப்பட்டார். இது உண்மையும் கூட. யாரோ சிலர் செய்த தவறு அனைவரையுமே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் படி ஆகி விட்டது. இவரைப் போல, பிரச்சனை செய்யாமல் தங்களை வருத்தி குடும்பத்திற்காக உழைக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது “லிட்டில் இந்தியா” பகுதி பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு, வார இறுதியில் மது விற்பனை இந்தப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் S$5000 (Approx INR 245000) அபராதமாக கட்ட வேண்டும், அதோடு தண்டனையும் உண்டு. பொது இடங்களில் யாராவது மது அருந்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் சிங்கப்பூர் காவல் துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தாமல் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். ஒருவேளை துப்பாக்கி பயன்படுத்தி ஒரு சிலர் இறந்து இருந்தால், மிகப்பெரிய பிரச்சனையாகி இருக்கும். 40 வருடத்தில் இது போல ஒரு சம்பவம் நடந்தது இல்லையென்பதால், அவர்கள் அனைவருக்குமே இது புதிய அனுபவம். இருந்தும் மூன்று மணி நேரத்தில் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். இரவே அந்தப் பகுதியை சுத்தம் செய்து, காலையில் பயன்பாட்டிற்கு விட்டு விட்டார்கள். அடுத்த நாள் எரிந்த சாலைப் பகுதியை செப்பனிட்டு அங்கு ஒரு கலவரம் நடந்த அடையாளத்தையே நீக்கி மக்களை சகஜமாக்கி விட்டார்கள்.
இந்த சமயத்தில் தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட விதம் மிக மிக மோசம். இந்த சம்பவத்தில் ஒன்று புரிந்தது. வெகு சில ஊடகங்கள் தவிர எவருக்கும் பொறுப்பில்லை என்பது. எந்த வித குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் மனம் போக்கில் செய்திகளை வெளியிடுகிறார்கள். இங்கே இருந்ததால் இவர்கள் செய்திகளை படித்து இவ்வளவு கேவலமாகவா செய்திகள் கொடுப்பார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.
சன் தொலைக்காட்சி எவ்வளவு பெரிய ஊடகம்!! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் மக்கள் பயந்து வீட்டில் இருக்கிறார்கள், தமிழருக்கும் சீனருக்கும் சண்டை என்று கூசாமல் கூறி இருக்கிறார்கள். இது எதுவுமே நடக்கவில்லை. அந்த இரண்டு மணி நேரம் கலவரம் மட்டும் தான் பிரச்சனை, அதன் பிறகு எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. வழக்கம் போல திங்கள் அனைவரும் பணிக்கு சென்றார்கள். எங்களுக்கு தான் மற்ற இனத்தவரை முகம் கொண்டு பார்க்க கூச்சமாக இருந்தது. facebook, forum போன்ற சமூகத் தளங்களில் நம்மை திட்டிக் கொண்டு இருந்தது மட்டுமே நடந்தது மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் யாருக்கும் இல்லை.
அதே போல உள்ளூர் சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முழுக்க முழுக்க இந்திய தொழிலாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம், பொய்யான தகவலை பரப்பியதால் சன் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு சரியான தகவலை வெளியிட்டு சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. சிங்கப்பூர் அரசாங்கமும் அதோடு முடித்துக்கொண்டது. தடை விதிக்கிறேன் என்றெல்லாம் கூறவில்லை.
நான் ஒரு முறை Lafoff பற்றி எழுதி இருந்தேன். அப்போது தமிழக செய்தியில், அமெரிக்கா பற்றி வந்த ஒரு விஷயத்தை அதுவும் இரண்டு வரி தான் குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு அமெரிக்காவில் வசிக்கும் பாஸ்டன் ஸ்ரீராம் இது தவறான செய்தி, இந்திய ஊடகங்கள் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே எழுதிக்கொண்டு இருக்கின்றன என்று சிறிய அளவில் பொங்கி விட்டார். வடிவேல் ஒரு படத்தில் சொல்வாரே.. “இரண்டு ருபாய் தாண்டா கேட்டேன்.. என்ன கோபத்தில் இருந்தானோ என்னை போட்டு பின்னிட்டான்” என்று அது மாதிரி நான் அமெரிக்கா பற்றி இரண்டு வரி தான் எழுதினேன், அவர் அதுக்கு கோபம் ஆகி விட்டார்.
நான் அதை தவறாக நினைக்கவில்லை, அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டேன். இனிமேல் எழுதும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று. எனக்கு தற்போது சிங்கப்பூர் விசயத்தில் தமிழக ஊடகங்கள் தவறாக எழுதிய போது, இவர் கூறியது தான் நினைவிற்கு வந்தது. எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், தங்களின் பொறுப்பை உணராமல் தவறான செய்திகளை மக்களுக்கு கொடுத்து பிரச்னையை பெரிது ஆக்குகிறார்கள்.
ராமதாஸ், சீமான் போன்றவர்களின் அறிக்கையைப் படித்தால், கடுமையான மன உளைச்சலாக இருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறி தமிழர்கள் என்றாலே மூளை இல்லாதவர்கள் என்று நினைக்கும்படி செய்து விடுவார்கள் போல இருக்கிறது. என்ன நடந்தது என்று தெரியாமலே பாதிக்கப்பட்டது தமிழன் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆதரித்து பேசுகிறார்கள் என்பதை விட தவறான தகவலை / நடக்காத ஒன்றை அறிக்கையாக சமர்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். மிகவும் அசிங்கமாக இருக்கிறது.ஏனென்றால், என்ன நடந்தது / நடக்கிறது என்று இங்குள்ளவர்களுக்குத் தெரியும். அப்படி இருக்க, நமக்கு நன்கு தெரிந்த ஒன்றை, நடக்காத ஒன்றை நடந்ததாக கூறக் கேட்கும் போது எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். இதை சிங்கப்பூர் குடிமக்கள் அறிய நேரிட்டால் தமிழர்களைப் / இந்தியர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள். கலைஞர் பொறுப்பாக அறிக்கை விட்டு இருக்கிறார்.
இந்தப் பிரச்சனையின் மூலம் தெரிந்து கொண்டது, சில தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் எந்த வித குறைந்த பட்ச விசாரணையும் இல்லாமல் தங்கள் மனம் போன போக்கில் பேசி வருகிறார்கள் என்பது. சிங்கப்பூர் அரசாங்கம் தொழிலாளர்கள் தங்கி உள்ள இடங்களில் விசாரணை செய்கிறது என்பது உண்மை தான் ஆனால், இவர்கள் நினைப்பது போல அடக்குமுறை அது இது என்றெல்லாம் இல்லை. வழக்கமான விசாரணை தான். இதை அந்த தொழிலாளர்கள் படித்தாலே “இவரே நம்ம பிழைப்பை கெடுத்து விடுவார் போல உள்ளதே” என்று தான் நினைப்பார்கள்.
சிங்கப்பூரில் கலவரம் நடந்தது உண்மை தான். இரவு 12 மணியோடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அதன் பிறகு யாரும் யாரையும் மிரட்டவில்லை, அடக்குமுறையும் இல்லை, யாரும் பயந்து ஒளியவில்லை, தமிழர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. எனவே, யாரும் இவர்கள் தரும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதோடு காவல் துறையும் மிகவும் வெளிப்படையாக தங்கள் நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். நீங்களே கூட அவர்களுடைய facebook தளம் சென்றால் காண முடியும். https://www.facebook.com/singaporepoliceforce
கலவரத்தில் 400 பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் குற்றத்தில் ஈடுபடாதவர்களை விடுவித்தது போக கைதாகியது 24 பேர் (தற்போது 5 பேர்). மீதி உள்ளவர்களை விசாரிக்காமல் எப்படி கண்டு பிடிக்க முடியும்? அடுத்த நாளே இவர்கள் தங்கியுள்ள இடங்களில் சென்று விசாரணை நடத்தினார்கள். CCTV ல் உள்ள காட்சிகளை வைத்து தங்களுடைய தகவல்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். அனைவரையும் பிடிப்பது என்பது சாத்தியம் இல்லை என்றாலும்.. சிலர் நிச்சயம் மாட்டுவார்கள்.
சிங்கப்பூர் சட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் K சண்முகம் அவர்கள் [இவர் ஒரு தமிழர்] தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் டார்மிட்டரி பகுதிகளுக்கு சென்று அவர்களின் அச்சத்தை போக்கி வருகிறார். தவறு செய்யாதவர்கள் எவரும் எதற்கும் பயப்பட தேவையில்லை, எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கத்தை அணுகலாம் என்று கூறி இருக்கிறார். இவர் இது போல அவர்களுடன் உரையாடுவது நிச்சயம் அவர்கள் மனதில் இருக்கும் இயல்பான பயத்தைக் குறைத்து நிம்மதியைக் கொடுக்கும். இது போல தொழிலாளர்களுடன் பேசும் போது பேச்சில் அதிகாரம் இருக்காது, இயல்பான உரையாடலே இருக்கும். உண்மையில் இதெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.
நான் சிங்கப்பூரில் இருப்பதால் கூறவில்லை, உண்மையாகவே சிங்கப்பூர் அரசாங்கம் நமக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. சுதந்திரம் கொடுத்து இருக்கிறது. இது போல ஒரு வசதியை / சுதந்திரத்தை வேறு எந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. சில நேரங்களில் நானே, “இவ்வளவு தூரம் நமக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமா?” என்று நினைத்து இருக்கிறேன். அந்த அளவிற்கு நம் மீது நம்பிக்கை வைத்த சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கெட்ட பெயரை உலகளவில் ஏற்படுத்தி விட்டோம். குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.
சிங்கப்பூரில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போல இருக்கிறது என்று கூறுவார்கள். எனவே, சிங்கப்பூரையும் தம் சொந்த ஊராக நினைத்தவர்கள், உடன் கலவரத்தையும் செய்து விடுவார்கள் என்று நான் கற்பனையிலும் நினைத்தது இல்லை. கிடைத்த சுதந்திரத்தை, வசதியை கெடுத்து தாங்களே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டார்கள். இதோடு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும். தமிழனுக்கு தமிழனே எதிரி.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
நன்றி
nandri
ReplyDeleteநண்பரே, நடந்த உண்மைகளை அறியத் தந்தமைக்கு நன்றி. உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் எனக்கும் சிங்கப்பூரில் வாழ வேண்டிய விருப்பம் வந்துவிட்டது.
ReplyDelete