Monday, February 21, 2011

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

ஏரிகருப்பண்ண சாமி


     வீட்டின் முன்கதவு மூடியிருந்தது. “அம்மா எங்க போயிருக்கும்” என்று யோசித்தபோது,”யார்ய்யா அது.. சரசு மவனா?”- என குரல் கேட்டது. அது நடராசு மாமா வீட்டு பெரியசாமி தாத்தாவுடையது. “ஆமா தாத்தா” என்றபடியே அவர் இருக்கும் எதிர்வீட்டு திண்ணைக்கு போனான்.படுத்துஇருந்த அவர் மெல்ல எழுந்தார். பலமாக இருமினார் ..

     “அம்மா கோயிலுக்கு போயிருக்கு, செத்த நேரத்துல வந்துடும்,இங்கன வந்து உக்காரு” என்றார். தன் புத்தகப் பையை திண்ணை மேல் வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த மணல் மூட்டையின் மேல் கால் வைத்து ஏறி திண்ணையில் உட்காந்தான்.

“ எங்க போய்ட்டு வார?”

“டியுசனுக்கு”

“ஆரு தமிழ் அய்யாகிட்டயா?”

“ம்ம்ம்..”

பின் அவர் ஏதேதோ பேச இவன் ஆர்வம் இல்லதவனாய் இருந்தான்.

“தாத்தா ராத்திரிக்கு இங்கேயேவா படுத்துகுவிங்க??” என கேட்டான்.

“ஆமா ராசா , ஏ கேக்குற””

“பேய் வராத தாத்தா?”

“பேயா ? அதெல்லம் வராது”

“இல்ல…. அன்னிக்கு ஒரு நா , நான் திண்ணையில படுத்து தூங்கிட்டேன்,அப்ப ராசா சித்தப்பா வந்து , இங்க படுத்தா ராத்திரி பேய் வரும் உள்ள போயி படுன்னு சொன்னரு அதா(ன்) கேட்டேன்”-என்றான்

“பேயெல்லாம் வராது , சாமிதான் வரும்”
“சாமியா ?? எந்த சாமி ?”
“ஏரிகருப்பண்ண சாமி “
“ ம்ம் எனக்கு தெரியும் , பாண்டமங்கலம் காவேரி அக்கா வூட்டுக்கு போறப்ப பார்த்தேன், பெரிய மீச, பெரிய்ய்ய அருவா வச்சுகிட்டு வான ஒசரம் இருந்துச்சு , ஒரு வெள்ள குதிரையும்,ஒரு கருப்பு நாயும் கூட இருந்துச்சு”

“ஆமய்யா அதுதான் நம்ம ஊர காவகாக்குற சாமி, ராத்திரி ஆச்சுனா குதிரையில ஊருக்குள்ள வந்து போகும்”
“ நீ பாத்திருக்கியா தாத்தா”
“ம்ம்ம் , ஒரு நா நான் நல்ல தூங்கிட்டு இருந்தப்ப , டொக்டொக் டொக்டொக்-ன்னு சத்தம் கேட்டுச்சு , நானும் போர்வைய வெளக்கி பாத்தேன். நல்லா கண்ண பறிக்கிற மாதிரி வெள்ள வெளேருன்னு குதிர , அது மேல தங்க நிறதுல சாமி உட்காந்திருந்துச்சு..” என்று அவர் சொன்ன போது இவன் அவரை நெருங்கி அமர்ந்துகொண்டான். அப்படியே அந்த சிந்தனையில் இருந்த தாத்தாவிடம் “ ம்ம் அப்புறம் என்ன ஆச்சு..” என்று கேட்டான்

“ம்ம் சாமி வாரப்ப நாம தொந்தரவு செய்யா கூடாது,அதனால போர்வைய இழுத்து போத்தி துங்கிட்டேன்.இப்பவும் தென(ம்) டொக்டொக்-ன்னு சத்தம் கேக்கும், நான் எந்திரிக்க மாட்டேன்” என்றவர் மீண்டும் பலமாக இருமினார்.
கோவிலுக்கு போன அவன் அம்மா திரும்பி வருவது தெரிந்தது. “நாளைக்கு எளஞ்செழியன் டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்குங்க ,உடம்பு சரியாகிடும் “ என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டு தன் அம்மாவிடம் ஓடினான்

வீட்டில் சாப்பிட்டுவிட்டு துங்கியவன் மனசெல்லாம் வெள்ளை குதிரையும் கருப்புசாமியும் இருந்தது . அவன்
தூக்கத்திலும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் கேட்டது. வெகுதூரத்தில் கேட்ட சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி அவன் தெருவில் நுழைந்து அவன் வீட்டு வாசலில்
வந்து நின்றது, அதே வெள்ளை குதிரையில் கருப்பண்ண சாமி .
“ஏ பெரியசாமி… வா நேரமாச்சு போகலாம்” என்று சாமி திண்ணையில் படுத்திருந்த தாத்தாவை கூப்பிட்டவுடன் தாத்தா எழுந்து வந்தார். அருகில் வந்த அவரை சாமி தன் குதிரைமேல் தூக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டது. மீண்டும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் .

காலையில் கண்விழித்த போது , நன்கு விடிந்து இருந்தது . முன்வாசலில் வழக்கத்துக்கு மாறாக மரபென்ச் போட்டு அதில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள் . கண்ணை கசக்கியபடியே வெளியே வந்தான். “எப்ப எழுப்பிவிட்டேன்,இப்பதான் எழுதிருச்சியா..நேரமாச்சு பள்ளிகோடத்துக்கு பொறப்படு..” என்று சொல்லிகொண்டே சென்றாள் அவன் அம்மா மிகவும் பரபரப்பாக.
வழக்கமான தன் காலைகடன்களை முடித்துகொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.அப்போது வந்த அவன் சித்தப்பா அவனிடம் கொஞ்சம் காசு கொடுத்து “பலக்காரன் கடையில பரோட்டா சாப்பிட்டு பள்ளிகோடம் போ” – என்றார் . “ஏ அம்ம சோறு ஆக்கலயா” என்று கேட்டான்,இல்லை என்று பதில் வந்தது . ஏன் என்று கேட்க எண்ணியவன் பரோட்டாவை நினைத்துகொண்டு கேட்கவில்லை
புத்தகப்பையை எடுத்துகொண்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுக் கூரைக்கும் இவன் வீட்டுக் கூரைக்கும் இடையே பந்தல் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது , சற்று தூரத்துல் பறை அடிப்பவர்கள் நெருப்பு மூட்டி பறையை அதில் காட்டிக்கொண்டிருந்தார்கள் , நேற்று கண்ட கனவை தாத்தாவிடம் சொல்லலாம் என எண்ணி திண்ணையில் தாத்தாவை தேடினான் .அவர் இல்லை . தாத்தா என்கே என அம்மவிடம் கேட்டன் “இன்னுமா பள்ளிகோடம் போகல, சீக்கிரம் போ..” என விரட்டினாள்
தாத்தாவை சாமி எங்க கூட்டிகிட்டு போயிருக்கும் ?? என எண்ணியபடி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தான் .

***
என் கதை யூத்புல் விகடனில் வந்துள்ளது ..
http://youthful.vikatan.com/youth/nyouth/prabustory151110.php

http://youthful.vikatan.com/youth/nyouth/index.php*****
     அந்த கதையும் முழு கற்பனை அல்ல . சிறுவனின் அம்மா திரும்பி வரும் வரை அவன் தாத்தாவுடன் பேசிகொண்டிருப்பவை எல்லாம் என் வாழ்வில் நடந்தவை, அந்த சிறுவன் நான்தான்,அதில் வரும் ராஜா சித்தப்பா,நடராஜ் மாமா,தமிழ் அய்யா, தாத்தா எல்லாம் நிஜம் (சாமியை தவிர) ஹ ஹ     தாத்தா இப்போ உயிரோடு இல்லை , அவர் அன்று என்னோடு பேசியதை சமிபத்தில் நினைத்து பார்த்த போது இப்படி கதையை எழுதினேன்

*****


--

பிரியமுடன் பிரபு

..

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...