Monday, February 21, 2011

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

ஏரிகருப்பண்ண சாமி


     வீட்டின் முன்கதவு மூடியிருந்தது. “அம்மா எங்க போயிருக்கும்” என்று யோசித்தபோது,”யார்ய்யா அது.. சரசு மவனா?”- என குரல் கேட்டது. அது நடராசு மாமா வீட்டு பெரியசாமி தாத்தாவுடையது. “ஆமா தாத்தா” என்றபடியே அவர் இருக்கும் எதிர்வீட்டு திண்ணைக்கு போனான்.படுத்துஇருந்த அவர் மெல்ல எழுந்தார். பலமாக இருமினார் ..

     “அம்மா கோயிலுக்கு போயிருக்கு, செத்த நேரத்துல வந்துடும்,இங்கன வந்து உக்காரு” என்றார். தன் புத்தகப் பையை திண்ணை மேல் வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த மணல் மூட்டையின் மேல் கால் வைத்து ஏறி திண்ணையில் உட்காந்தான்.

“ எங்க போய்ட்டு வார?”

“டியுசனுக்கு”

“ஆரு தமிழ் அய்யாகிட்டயா?”

“ம்ம்ம்..”

பின் அவர் ஏதேதோ பேச இவன் ஆர்வம் இல்லதவனாய் இருந்தான்.

“தாத்தா ராத்திரிக்கு இங்கேயேவா படுத்துகுவிங்க??” என கேட்டான்.

“ஆமா ராசா , ஏ கேக்குற””

“பேய் வராத தாத்தா?”

“பேயா ? அதெல்லம் வராது”

“இல்ல…. அன்னிக்கு ஒரு நா , நான் திண்ணையில படுத்து தூங்கிட்டேன்,அப்ப ராசா சித்தப்பா வந்து , இங்க படுத்தா ராத்திரி பேய் வரும் உள்ள போயி படுன்னு சொன்னரு அதா(ன்) கேட்டேன்”-என்றான்

“பேயெல்லாம் வராது , சாமிதான் வரும்”
“சாமியா ?? எந்த சாமி ?”
“ஏரிகருப்பண்ண சாமி “
“ ம்ம் எனக்கு தெரியும் , பாண்டமங்கலம் காவேரி அக்கா வூட்டுக்கு போறப்ப பார்த்தேன், பெரிய மீச, பெரிய்ய்ய அருவா வச்சுகிட்டு வான ஒசரம் இருந்துச்சு , ஒரு வெள்ள குதிரையும்,ஒரு கருப்பு நாயும் கூட இருந்துச்சு”

“ஆமய்யா அதுதான் நம்ம ஊர காவகாக்குற சாமி, ராத்திரி ஆச்சுனா குதிரையில ஊருக்குள்ள வந்து போகும்”
“ நீ பாத்திருக்கியா தாத்தா”
“ம்ம்ம் , ஒரு நா நான் நல்ல தூங்கிட்டு இருந்தப்ப , டொக்டொக் டொக்டொக்-ன்னு சத்தம் கேட்டுச்சு , நானும் போர்வைய வெளக்கி பாத்தேன். நல்லா கண்ண பறிக்கிற மாதிரி வெள்ள வெளேருன்னு குதிர , அது மேல தங்க நிறதுல சாமி உட்காந்திருந்துச்சு..” என்று அவர் சொன்ன போது இவன் அவரை நெருங்கி அமர்ந்துகொண்டான். அப்படியே அந்த சிந்தனையில் இருந்த தாத்தாவிடம் “ ம்ம் அப்புறம் என்ன ஆச்சு..” என்று கேட்டான்

“ம்ம் சாமி வாரப்ப நாம தொந்தரவு செய்யா கூடாது,அதனால போர்வைய இழுத்து போத்தி துங்கிட்டேன்.இப்பவும் தென(ம்) டொக்டொக்-ன்னு சத்தம் கேக்கும், நான் எந்திரிக்க மாட்டேன்” என்றவர் மீண்டும் பலமாக இருமினார்.
கோவிலுக்கு போன அவன் அம்மா திரும்பி வருவது தெரிந்தது. “நாளைக்கு எளஞ்செழியன் டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்குங்க ,உடம்பு சரியாகிடும் “ என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டு தன் அம்மாவிடம் ஓடினான்

வீட்டில் சாப்பிட்டுவிட்டு துங்கியவன் மனசெல்லாம் வெள்ளை குதிரையும் கருப்புசாமியும் இருந்தது . அவன்
தூக்கத்திலும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் கேட்டது. வெகுதூரத்தில் கேட்ட சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி அவன் தெருவில் நுழைந்து அவன் வீட்டு வாசலில்
வந்து நின்றது, அதே வெள்ளை குதிரையில் கருப்பண்ண சாமி .
“ஏ பெரியசாமி… வா நேரமாச்சு போகலாம்” என்று சாமி திண்ணையில் படுத்திருந்த தாத்தாவை கூப்பிட்டவுடன் தாத்தா எழுந்து வந்தார். அருகில் வந்த அவரை சாமி தன் குதிரைமேல் தூக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டது. மீண்டும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் .

காலையில் கண்விழித்த போது , நன்கு விடிந்து இருந்தது . முன்வாசலில் வழக்கத்துக்கு மாறாக மரபென்ச் போட்டு அதில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள் . கண்ணை கசக்கியபடியே வெளியே வந்தான். “எப்ப எழுப்பிவிட்டேன்,இப்பதான் எழுதிருச்சியா..நேரமாச்சு பள்ளிகோடத்துக்கு பொறப்படு..” என்று சொல்லிகொண்டே சென்றாள் அவன் அம்மா மிகவும் பரபரப்பாக.
வழக்கமான தன் காலைகடன்களை முடித்துகொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.அப்போது வந்த அவன் சித்தப்பா அவனிடம் கொஞ்சம் காசு கொடுத்து “பலக்காரன் கடையில பரோட்டா சாப்பிட்டு பள்ளிகோடம் போ” – என்றார் . “ஏ அம்ம சோறு ஆக்கலயா” என்று கேட்டான்,இல்லை என்று பதில் வந்தது . ஏன் என்று கேட்க எண்ணியவன் பரோட்டாவை நினைத்துகொண்டு கேட்கவில்லை
புத்தகப்பையை எடுத்துகொண்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுக் கூரைக்கும் இவன் வீட்டுக் கூரைக்கும் இடையே பந்தல் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது , சற்று தூரத்துல் பறை அடிப்பவர்கள் நெருப்பு மூட்டி பறையை அதில் காட்டிக்கொண்டிருந்தார்கள் , நேற்று கண்ட கனவை தாத்தாவிடம் சொல்லலாம் என எண்ணி திண்ணையில் தாத்தாவை தேடினான் .அவர் இல்லை . தாத்தா என்கே என அம்மவிடம் கேட்டன் “இன்னுமா பள்ளிகோடம் போகல, சீக்கிரம் போ..” என விரட்டினாள்
தாத்தாவை சாமி எங்க கூட்டிகிட்டு போயிருக்கும் ?? என எண்ணியபடி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தான் .

***
என் கதை யூத்புல் விகடனில் வந்துள்ளது ..
http://youthful.vikatan.com/youth/nyouth/prabustory151110.php

http://youthful.vikatan.com/youth/nyouth/index.php*****
     அந்த கதையும் முழு கற்பனை அல்ல . சிறுவனின் அம்மா திரும்பி வரும் வரை அவன் தாத்தாவுடன் பேசிகொண்டிருப்பவை எல்லாம் என் வாழ்வில் நடந்தவை, அந்த சிறுவன் நான்தான்,அதில் வரும் ராஜா சித்தப்பா,நடராஜ் மாமா,தமிழ் அய்யா, தாத்தா எல்லாம் நிஜம் (சாமியை தவிர) ஹ ஹ     தாத்தா இப்போ உயிரோடு இல்லை , அவர் அன்று என்னோடு பேசியதை சமிபத்தில் நினைத்து பார்த்த போது இப்படி கதையை எழுதினேன்

*****


--

பிரியமுடன் பிரபு

..

Monday, February 14, 2011

என்னாங்கடா உங்க காதல்..-1 (18-)


முதலில் எனக்கு தெரிஞ்ச இரண்டு காதல்'களை' சொல்கிறேன்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)


     நாமக்கல் பேருந்து நிலையத்தில் நுழைந்த போதுதான் அவன் என்னை அழைக்கும் குரல் கேட்டது . புத்தகக்கடைக்கு அருகில் பாஸ்கர் நின்றுகொண்டிருந்தான்.

"என்னடா இங்க.."-என்றேன்
"எனக்கு கலியாணம் ஆச்சுடா.." -என்றான் ,
பீ.சி.யே 3 வது வருடம் படிக்கிறவன் திடிர் என கலியாணம் ஆச்சுனு சொன்னதால நான் நம்பவில்லை,  "நிஜம்தாங்க" என்றாள் அவன் அருகில் நின்ற அந்த பெண். அவள் பெயர்  தீபா , அவனுடன் படிப்பவள் . நான் நம்புவதற்க்காக சுடிதாருக்குள் மறைந்து இருந்த தாலியை எடுத்து காட்டினாள்.

     சிலர் சிரிப்பார்கள், உதடுகளில் மட்டும் அது இருக்கும், ஆனால் தீபா தன் தாலியை என்னிடம் காட்டிய போது அவள் முகம் முழுக்க, உடல் முழுக்க அந்த சிரிப்பும் மகிழ்சியும் இருந்தது, அந்த நொடி அவள் பேருந்து நிலையத்தில் இல்லை,எங்கோ மிதந்து கொண்டிருக்கிறாள் என்பது போல இருந்தது அவள் முகம். நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு  இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். மனதுக்குள் அவளுக்காக வருத்தப்பட்டேன். தன் தலையில் தானே மண்னையள்ளிப் போட்டுக்கொண்டாளே.. என

     சரியான நேரம் பார்த்து இருவரும் பாஸ்கரனின் வீட்டுக்கு வந்தார்கள், சற்று முரடனான அவன் அப்பா போட்ட சண்டையில் தெருவே கூடிவிட்டது, அதே நேரம் விசயம் அறிந்த பெண்வீட்டாரும் ஒரு கும்பலாக அங்கே வந்தார்கள். ஊர் தலைவர் உள்ளிட்ட சிலர் தலையிட்டு சமாதானம் பேசினார்கள்,அந்த சபையில் பாஸ்கரன் அப்பா பெண்னை பார்த்து கேட்டார் "பென்சில் பேனா வாங்கவே என்கிட்டதான் காசு கேப்பான்,எதை நம்பி கலியாணம் செய்துகிட்டீங்க" ? ..,அப்பாவுக்கு பயந்தவன் பாஸ்கர் எனவெ அமைதியாகவே இருந்தான். இங்கதான் மக்களே கதையின் முக்கிய காட்சி..(நோட் பண்ணுங்க) அந்த பெண் பதில் சொல்கிறாள் "ஏன் வழியில்லையா? நாங்க படிச்சிருக்கோம் வேலைக்கு போவோம் இல்லாட்டி சுண்ணாம்பு அடிக்க போகலம், மேஸ்த்ரி வேலைக்கு போகலாம், வழியா இல்லை" என்று வசனம் பேசுச்சு (இடைவேளை)

     பிரச்சனை காவல் நிலையம் போச்சு,என்ன நடந்ததோ அவள் தன் பெற்றோர் உடன் செல்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டாள். இவனும் ஒருநாள் துக்கம் அனுசரித்துவிட்டு வழக்கம் போல கல்லூரி போனான். பெண் வீட்டார் நல்ல வசதி,பெண்னுக்கு திருமன ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள், எற்கனவே விசயம் ஊர் முழுக்க தெரிந்ததாலும், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தான் பாஸ்கரனை விரும்புவதாக தீபா சொல்லிவருவதாலும் வேறு வழியின்றி மீண்டும் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது

     இப்படியாக தீபா தன் காதலில் வெற்றி கொடி நாட்டினாள்..  ம்ம்ம்ம் இருங்க, எங்க எழுந்து போகுறீக.. இது என்ன சினிமாவா காதல் ஜெயிச்சதும் சுபம் போட.. இது வாழ்க்கைங்க படமே இனிமேல்தான் ஆரம்பம்....

     எப்படியோ கல்லூரி முடித்தான், பின் வேலைக்கு சென்றான், ஆனால் எங்கும்  2 மாதம் கூட நீடிக்கவில்லை "ஆச இருக்கு அரசனாக,யோகம் இருக்குது ஆண்டியாக"-ங்கறது போல. பின் மாமனார் ஒரு கடை வைத்து கொடுத்தார், தண்ணி ,சீட்டாட்டம் என பழக்க பட்டவனுக்கு வியபாரம் சரிவரல,நட்டம் . தன் தந்தை இறப்புக்கு பின் கிடைத்த தன் பங்கு பணத்திலும் தொழில் செய்து நட்டம்,போதாகுறைக்கு சீட்டாடி குடித்துவிட்டு வந்து தீபாவுக்கு அடி உதை..தன் மகளுக்காக அவனின் மாமனார் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஓடுது.அவனுக்கு ராச வாழ்க்கைதான்.பாவம் தீபா, சமிபத்தில் என் நண்பன் ஒருவரை வழியில் சந்தித்த போது அவன் செய்த கொடுமைகளை சொல்லி அழுதுள்ளார்


2.
          வீட்டிலும்,மற்ற சொந்தத்தாலும் அதிகம் பாசம் கொட்டி வளர்க்கபட்டவன் சங்கர்.எல்லாம் பெண்கள் இவன் மட்டுமே ஆண்பிள்ளை என்பதால் பெரியவர்களும் மற்ற பெண்களும் அளவற்ற அன்பு காட்டினார்கள்.பிகாம் 3 வருடம் ஆரம்பித்ததில் இருந்தே அடிக்கடி வீட்டில் சண்டை, நான னவனுடன் நெருங்கி பழகுபவன் என்பதால் என்னிடம் புகார் வரும். நானும் இது எல்லாவீட்டிலும் வரும் தலைமுறை இடைவெளிதான் என எண்ணி சமாதானம் செய்தேன். ஒரு நாள் பேசும் போது தான் ஒரு பெண்னை காதலிப்பதாகவும்,கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் எனவும் சொன்னான்.அப்பதான் எனக்கு புரிந்தது இவன் பிரச்சனைகளின் காரணம் காதல் என்று.

     தம்பி.. காதல் என்பது பிறந்த குழந்தை போல, அவ்வளவு அழகானது,எல்லோருக்குமே ஆசைவரும்,அதுக்காக 6 மாதத்திலேயே வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தால் பார்க்க சகிக்காது.. கொடுரமா இருக்கும். காதல் தப்பில்ல,ஆனா 19 வயசுல வருவது காதல் அல்ல வெறும் இன்கவர்ச்சி. இந்த வயசுல உன்னையே உன்னால புரிந்துகொள்ள முடியாது பின் எப்படி ஒரு பெண்ணை புரிந்து காதல் செய்வது?. இந்த வயசுல வரும் காதல் ஒரு ஹச்.ஐ.வி கிருமி போல,அந்த கிருமி நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் தாக்கி அழிச்சிடும்,வேறு எதுவும் செய்யாது. அது போலத்தான் இந்தக்  காதலும் உன் சுய சிந்தனையை கொல்லும் பின் நீ தானாக அழிவாய்..."--- ம்ம்ம் இப்படியெல்லம் ஆரம்பித்து மணிகணக்கா பேசினேன்.ஆனா அவன் சொன்னான் பாருங்க ஒரு பதில் 'காதலிச்சாத்தான் அதன் அருமை தெரியும்"" ன்னானுங்க. இனி இவனிடம் பேசுவதும் குடிகாரனிடம் பேசுவதும் ஒன்னுதான்.

     உறவுகள் இவனுக்கு புத்திமதி சொன்னது. உறவெல்லாம் பகையாக தெரிந்தார்கள் .தன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பதே இவன் வீட்டில் உள்ளவர்கள் மீது கொண்ட கோபத்திற்கு காரணம், ஏன் லேட் என கேட்டால் சண்டை, பேசினாலே சண்டை,இப்படி சண்டைகள் அடிக்கடி நடந்ததால் இறுதி தேர்வில் கோட்டைவிட்டான், தன்னோடு படித்தவர்கள் மேற்படiப்பு படிக்க இவன் 1 வருடம் வெட்டியாக ஊர் சுற்றினான், பின் அரியர் முடித்து மேற்படிப்பு சேர்ந்தான். இப்போ படிச்சுகிட்டு இருக்கான்.. அவன் காதலி இப்போ வேறு ஒருவனின் மனைவி. கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று அப்போ சொன்னான் இனி கட்டனுமுனா ரெண்டாந்தாரமா போனாத்தான் ..

     வயசுக்கோளாறில் ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என எண்ணி குழப்பிகொண்டதால், தன் குடும்பதார் மற்றும் சொந்தங்கள் அவன்மேல் வைத்திருந்த காதலை இழந்துவிட்டான். இதுதான் இப்போ பிரச்சனையே காதல் எது இனக்கவர்ச்சி எது என பிரித்து பார்க்க தெரிவதில்லை

     கல்லுரியில் ஒரு நாளில் இரண்டு மணிநேரம் பேசி இருப்பாயா? , வருசம் ஒரு 175 நாள் பழகியிருப்பாயா?  , அதற்க்குள் எப்படி  வாழ்நாள் முழுவதும் அவனே/அவளே துணை என முடிவு செய்வது ? அதுவும் உன்னையே சரியாக புரிந்துகொள்ள முடியாத அந்த வயதில் ?

   ஒரு ஆண் பெண்ணிடமும் ஒரு பெண் ஆணிடமும் தன்னை முழுமையாக வெளிகாட்டி கொள்வதில்லை. அவர்களின் சுய உருவங்களை காண நாம் அவர்களுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டிவரும்.
            சங்கரின் காதலியை பாராட்டலாம் . சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார் .நன்கு படித்து வேலையில் உள்ள மாப்பிள்ளையை காட்டினால் அவளின் மனம் மாறியிருக்கும் .படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் தன்னோடு காதல் கொண்டு படிப்பை கோட்டைவிட்ட சங்கரை விட அந்த மாப்பிள்ளை சரியானவனாக தெரிந்திருக்கலாம்.

     "ஒரு விசயத்தின் மேல் அதிகம் ஆசைவைக்கும் போது அது மதிப்புடையதா இல்லையா என்று பார்க்கமுடியாமல் போய்விடுகிறது, பசிக்கின்ற போது சாப்பிட்டுவிடுகின்ற கெட்ட பதார்த்தம் பொல பல இடங்களில் ஆகிவிடுகிறது காதல்" - பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)

    எதன் மீது எல்லம் புனித(ம்) பிம்பம் கட்டPபடுகிறதோ அவைகளில் எல்லாம்  அயோக்கியதனமும், ஏமாற்று வேலைகளும் அதிகம் நடக்கும். எ.க -கடவுள் ,மதம் ,
இவைகளின் மீது எல்லொருக்கும் ஒரு ஈர்ப்பு அதை சிலர் அவர்களின் சுயநலத்துக்காக paயன்படுத்துகிறார்கள். பாஸ்கரனும் அப்படித்தான் காதல் என்ற புழுவோடு அவன் போட்ட தூண்டிலில் மாட்டியது தீபா என்ற மீன் மட்டும்தான், வருத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டாச்சு.. தீபா இல்லட்டியும் அவன் வாழ்வு அப்படித்தான் இருந்து இருக்கும் ,காரணம் அதுதான் அவன் இயல்பு. ஆனால் தீபவுக்கு? அவளின் ஆசை,கனவு,காதல், அவன் மேல் கொண்டு இருந்த நம்பிக்கை எல்லம் அவன் அடிக்கும் அடியில் உடைந்து போச்சு. உடலளவில் மட்டும் அல்ல மனதளவிலும் அவள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் .ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாஸ்கர் பற்றி தீபாவிடம் சொல்லியிருந்தால் நம்பியிருப்பாளா ? கண்டிப்பாக மாட்டாள். பாஸ்கரின் அம்மா அப்பவே வந்து சொன்னாலும் நம்பமாட்டாள் . காதலக்கு கண் இல்லையாம்

     இதுவே தீபா மோசமான பெண்ணாக இருந்து ,பாஸ்கர் யோக்கியனாக இருந்திருந்தால் எப்போதே தீபாவை விட்டு பிரிந்து இருப்பான் .இவள் நான்  நினைத்தது  போல் இல்லை ,என்னை  எமாற்றி விட்டால்,  இவளால் நமக்கு இன்பம் இல்லை துன்பம் மட்டுமே என வரும் பொது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு பிரிவது இங்கே எளிது , ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படி அல்ல, அவளின் மீதான சமுதாய பார்வை வேறு .

     ஒரு சேலை எடுக்கவே பத்து கடை ஏறும் பெண்களே , வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் ஏன் இப்படி அவசரம்? ... ஒருவன் தன் பின்னால் சுற்றுவது அவர்களுக்கு ஒரு போதையை தரும் போல ,அதில் மயங்கி சிலர் வாழ்வை தொலைகிறார்கள்

     வங்கியில் பணம் போட்டால் கூட நல்ல வங்கி எது என பலமுறை சோதித்து போடுகிறோம் , வழக்கை துணை தேர்வில் எவ்வளவு கவனம் இருக்கணும் ?, தவறான வங்கியில் போடும் பணம் போல தவறான நபரின் மீது ( ஆண்/பெண் ) கொள்ளும் காதலும் பயனில்லாமல் போகும். பணம் போனால் சம்பரிச்சுகலாம் .வாழ்க்கை ?!?!?!? 

*****
          சேலத்துலேர்ந்து காலைல ஈரோடுக்கு வந்தேன். அப்போ சேலத்துல ஒரு மலைகிட்ட பஸ் மெல்ல போச்சு. எல்லோரும் எட்டி எட்டி பார்த்தாங்க, என்னானு கேட்டேன். அதோ பார் மலை உச்சில ஒரு மான் நிக்குதுனு சொன்னாங்க, எட்டிpபர்த்தேன்,கூர்மையாக பார்த்தேன், ஒரு பெண்மான் நின்னுகிட்டு இருந்துச்சு, ஆச்சரியமா இருந்துச்சு. ஆமாங்க மான் நிக்குது அசையுதுனு சொன்னேன்,. அது மான் இல்லை அது நிழல் ஒரு பாறையினுடைய நிழல். மலையேறி பார்த்தா அங்க ஒன்னும் இருக்காது பாறைதான் இருக்கும், கீழ இருந்து பார்த்தா மான் போல தெரியும் என்று சொன்னாங்க.ஆக அது மான் இல்ல பொய்மான், அதுபோல என் காதலும் பொய்மான், மான் இருகிறது போல இருக்கு கிட்ட போனா இல்லை அதேபோல காதல் இருக்குனு நினைச்சேன் கிட்டபோனா பின் இல்லைனு தெரிஞ்சுது, உண்மையிலேயே அது நிழல்தான் பொய்தான்.. - பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)
*****

Wednesday, February 02, 2011

பசியோடு புலி


பாதைகள் ஏதுமற்ற அடர்ந்த காடு
பூவின் அழகில் லாயித்திருந்த வேளை
புதரொன்றில் இருந்து
புலியொன்று வரக்கண்டேன்

பசியொடு புலி என்மிது பாய
பயங்கொண்டு நானும் ஓட

மாலைவரை ஓடி ஒரு
மலை உச்சியை அடைந்தேன்
நிழலாய் புலியும்
என் பின்னால் நின்றது
இனியேதும் தாமதித்தால்
எலும்புகூட மிஞ்சாது
உச்சியில் இருந்து எம்பி குதித்தேன்

இருதயத் துடிப்பு  இருமடங்காக
திடுக்கிட்டு விழித்தேன்
அடடா...
கனவுதான்  என  தெரிந்திருந்தால்
புலிக்கே  உணவாகியிருக்கலாம்பிரியமுடன் பிரபு ...
.

Tuesday, February 01, 2011

பகிர்வு-1-இரண்டு கவிதைகள்


விதி

அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்கய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

...... காலப்ரியாவின் கவிதை

***

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள்நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக்கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொட்டராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும் ?

---ஞானக்கூத்தன்

.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...