Showing posts with label pothanur. Show all posts
Showing posts with label pothanur. Show all posts

Saturday, April 05, 2014

தேர் திருவிழாவில் சண்டை...

     தொட்டியம் தேர் திருவிழாவில் சண்டையாம்(05-04-2014)..சாதி தான்.. தேரு ஓரமா நிக்கிது போல.. எங்க ஊருல(Pothanur - பொத்தனூர்)  ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு..அதுக்கு பாவம் முழுசா விழா போட்டு 20 வருசம் மேல இருக்கும்..அப்போ தேர் வரும் வீதி வைத்து ஜாதி சண்டை..அதன் பின்னனியை பார்த்தல் சில தனி குழுக்களின் சண்டைதான் ஆன அவன் இவனை அடிச்சுட்டானு சொன்னா அது தனிச்சண்டை..அதையே இந்த சாதிக்காரன் அந்த ஜாதிக்காரனை அடிச்சுட்டானு சொன்னா அது சாதிச்சண்டை சும்ம குபுகுபுன்னு எரியும்..அப்படித்தான் ஆச்சு..அப்புறம் போலிசு வந்து ஊரடங்கு போட்டு..ம்ம் ஆச்சு 20 வருசம் மேல..இடையில 10-12 வருசம் முன்பு ஒருக்கா பாதி திருவிழா நடந்துச்சு ஆனாலும் முழுசா முடிக்கல.ந்த மனுசபய சண்டைக்கு சாமி என்ன செய்யும்னு சிலரு கேட்கலாம்..ஆமா ஆமா சாமி என்ன செய்யும்.. தன்னைவிட சக்தி வாய்ந்த மனுசன்கிட்ட மோத சாமியால முடியுமா என்ன..:))  

          இப்ப வேற வழியில்லாம புதுசா ஒரு மாரியம்மன் கோவில் கட்டி கும்பாவிசேகம் முடிச்சுட்டாங்க... வரும் 28ஆம் தேதி காப்புகட்டி மே மாதம் திருவிழான்னு தகவல் வந்திச்சு..மே மாதம் 1 முதல் 18 வரை அங்கே போக முன்பே திட்டமிட்டு இருந்தேன்,அந்த தேதியில் ஊர் திருவிழா வந்தால் மிக்க மகிழ்ச்சி..ம்ம் பார்க்கலாம்..தொட்டியத்தில் நடக்கும் சண்டை இதையெல்லாம் நினைக்க வச்சிடுச்சு..

 என்னுடைய பழைய பதிவு.. 

உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை 
காவலுக்கு நிக்குதய்யா

http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html
 பிரியமுடன் பிரபு ...

Tuesday, November 06, 2012

மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"

          அது ஒரு  தீபாவளிக்கு முந்தைய இரவு , அந்த அரசு பள்ளிக்கு எதிரில் இருந்த அகல்யா ரெஸ்டாரென்ட் வாசலில் வண்டியை நிறுத்தியதுமே "ஏன்டா லேட்டு" என்றான் கோபி. அவனுடன் திரு, சேகர், மணி, குமார் எல்லோரும் இருந்தார்கள்.

"என்னடா அவசரம் கை நடுங்குதோ"

"டேய் அப்புறம் பகவதி படத்துக்கு போக லேட் ஆகிடும்டா" என்று அவன் சொல்ல  நானும் சரவணனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றோம்.

          சின்ன சின்ன குடில்கள்  போல அறைகள், கதவுகள் இல்லாமல் துணியால் ஆனா  திரை தொங்கியது. முதல் அறையின் திரை விலகி இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என்று அதனுள் செல்ல முயன்ற என்னை சேகர் தடுத்தான். "நம்முது நாலாவது ரூம்மு" என்றன்,அப்போது எதிரே வந்த அந்த பெரியவரிடம் "நம்ம ரூமு ப்ரீயா இருக்கண்ணே" என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்லிச்சென்றார்.

          மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்த சிறிய அறை ரம்யமாக இருந்தது. அந்த வட்ட மேசையை சுற்றி  5 முதல் 8 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஒரு பணியாள்  வந்து என்ன வேண்டும் என கேட்டார். உணவும் மதுவகைகளும் சொல்ல கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த திரவத்தில் அப்படி என்ன இருக்கோ .. பார்த்தவுடனேயே அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. மிகச்சரியான அளவில் மது கோப்பையில் ஊற்றப்பட்டது. மது பழக்கம் இல்லாத நானும் சரவணனும் 7up உதவியுடன் அவர்களின் ஜோதியில் கலந்துகொண்டோம் .

          ஒவ்வொருவரும் ஒருமாதிரி அதைக் குடித்தார்கள்,ஒருவன் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்,ஒருவன் மெல்ல மெல்லக் குடித்தான், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாட்டுவைத்தியன் கொடுத்த கசாயத்தை குடிப்பதுபோல குடித்தான் ஒருவன். இப்படியாக குடித்தபடியே அன்று நடந்த கிரிகெட் போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அறைக்கு வெளியே இருந்து கேட்ட பேச்சுக்குரல் அனைவரின் கவனத்தையும் திருப்பியது .
" *** பெரிய இவனாட அவ(ன் ),நா இருக்கேன்டா நீ  கவல படாத, நண்ப(ன்) காதலுக்காக நா உயிரையும் கொடுப்பேன்" - என்று ஒரு குடிகாரனின் குரல் கேட்டது .

"அது குமரேசன் தானே " -என்றான் சரவணன்

"ஆமாண்டா.."

" *** அவரு நண்பே(ன் ) காதலுக்கு  உசுர கொடுப்பாராம்ல , இவனோட தங்கச்சிய அவ(ன்) நண்பன் காதலிச்ச கட்டிக்கொடுப்பானான்னு கேளுடா " என்று சரவணன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .

"சும்மா சரக்கடிச்சுட்டு உளர்றது " என்று சரவணன் மேலும் பேச
-
"டேய் , சரக்க தப்பு சொல்லாதடா  நீயெல்லாம் 7up குடிச்சு பேசுரதவிடவா நாங்க பேசிட்டோம் , நீயே சொல்லு பிரவு இவ்வளோ நேரமா இவன்தானே அதிகம்  பேசிட்டிருக்கன் ,அரைலிட்டர் 7up குடிச்சுட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு..." -என்றன் திரு .

"அரைலிட்டர் குடிச்சது போத அதிகமாகிடுச்சு போல"-என்று சரவணனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். அப்போது அவசரமாக தள்ளாடியபடியே வெளியே ஓடிய சேகர் அருகே இருந்த வாஸ் பெசனில் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது . "இப்ப தெரியுதா ஏன் நமக்கு 4 வது ரூம்னு..இங்கதான் பக்கதுலையே வாஸ் பேசன் இருக்கு " என்றன் கோபி .திரு எழுந்து சேகருக்கு உதவிக்கு போனான் .இப்படி ஒரு வழியாக குடித்து/சாப்பிட்டு முடித்து வாயில் சிலர் சிகரட்டோடும் சிலர் பீடாவோடும் வெளியேறினோம்.

          கொஞ்சம் துரத்தில் இருந்த அபிராமி தியேட்டரில் வண்டியை நிறுத்தியவுடன் டோக்கன் கொடுப்பவரிடம்

"அண்ணே படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு "

"5 நிமிசம்தான் ஆச்சு தம்பி" என்றார் அவர்

சரவணன் சிரித்தபடியே சொன்னான் "ம்கும் இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்தாலும் இதே வசனம்தா  சொல்லுவாரு இவர் ".

          டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை , நான்  7 டிக்கெட் என்று சொல்லும் போது  தியேட்டர் உள்ளே இருந்து டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்த எங்கள் ஊர் நண்பர்கள் சிலர்

"அண்ணே உள்ள பால்கேநில உட்கார இடம் இல்லை " என்றர்கள்

"இல்லாட்டி முன்வரிசைல போய் உட்காருப்பா"

"முன்வரிசைக்கா டிக்கெட் கொடுத்திங்க ? காசு அதிகம் வாங்கிட்டு முன்னடி உட்கார சொன்ன எப்படி ? மேலே எக்ஸ்ட்ரா சேர் போட்டு கொடுங்க "

"ஆமா இவருக்கு கட்டில் போட்டு கொடுப்பாங்க " என்று அவர் கடுப்பாக பதில் சொன்னார்,அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது ,அதற்குள் எங்களுக்கும் டிக்கெட் கொடுத்து இருந்தார்.

"மேலத்தான் இடம் இல்லையே ,நாங்க எங்க போக ?- என்றேன்

"முன்னாடி இடம் இருக்கு தம்பி " என்று பதில் வந்தது

"டேய் விஜய் மூஞ்சிய  மேல இருந்து பார்த்தாலே சகிக்காது , இதுல முன்வரிசைல இருந்து பார்த்த அவ்ளோதான் ,படமே பார்க்க வேணாம் டிக்கெட்ட திருப்பி கொடு" என்று என்னிடம் சொன்னான்  என் பின்னல் நின்ற சேகர் .

நான் டிக்கெட்டை திருப்பிக்கொடுத்தேன், அவர் என்னை முறைத்தார் என்னை நகர்த்திவிட்டு சரவணன் கவுண்டர் முன் நின்றன்.அவர் பதில் சொல்லாமல் காசை திருப்பிக் கொடுத்தார். "உம் முஞ்சிய பார்த்து வெளி ஊருன்னு நினைச்சுட்டான் போல" என்று என்னிடம் சொல்லியபடியே காசை சரவணன் வாங்கிக்கொள்ள எல்லோரும் வெளியேறினோம்.

"சரிடா அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா " என்றேன்

"ம்ம் உனக்கென்ன நீ குடிக்கல  உங்கப்பா கதவ திறந்து விடுவாரு ,எங்கபே ஓதப்பா(ன்)"

"அதுக்கு என்ன பண்ண ?"

"2 ஹவர்ஸ் இருந்துட்டு அப்புறம் போகலாம்.." என்று சொல்லியபடி பழமுதிர் சோலைக்கு அருகில் இருந்த டீக்கடை நோக்கி சென்றார்கள் .திரு-வை தவிர எல்லோருக்கும் போதை தலைகேறி இருந்தது .ஒரு எலும்பிச்சம் பழம் வாங்கி அவர்களின் வாயில் பிழிந்து விட்டான் சரவணன் ,போதை தெளியட்டும் என்று.திரு ஒரு சிகரெட்டை ஊதியபடி இருந்தான்

"நீயும்தானே குடிச்ச ,இவனுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ?" என்றேன் திரு-விடம் .

"ஒரு அளவு வேணாமா ?..குடிங்கடான்னா குளிக்கிரானுங்க..அப்புறம் இப்படித்தான்" என்றான்

          சேகர் மீண்டும் வாந்தி எடுத்தான் ,கண்கள் கலங்கி சிவப்பாகி இருந்தது .நேரம் செல்லச்செல்ல கொஞ்சம் போதை இறங்கியது ,தலையில் கைவைத்தபடி இருந்த சேகர் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா " என்றான், சரவணன் லேசாக சிரித்தான். பின்பு ஒருவழியாக அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குச்சென்றோம்.

         பலவருசம் கழித்து அதே போன்ற ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு ,இந்த நினைவுகளை பேசியபடி சரவணனுடன் அதே சாலையில் வண்டியில் சென்றேன்.

"அவனுங்க இன்னும் அப்படித்தாண்டா இருக்கனுங்க..அதுவும் அந்த சேகர் ரொம்ப மோசம்டா ,சம்பாரிக்கிறத எல்லாம் குடிச்சே காலியாக்கிடுறான், பாவம்டா அவே அப்பா அம்மா ,எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து பயிர்ல (வெற்றிலை கொடிக்கால்) மாடா உழைச்சு படிக்கவச்சாங்க , வயசான காலத்துல பையன் காஞ்சி ஊத்துவான்னு ம்ம்ம்ம் எங்க இன்னும் அவங்க சொத்துக்கு அவங்க வேலசெஞ்ச்சாத்தான் வழி,ஒரு தங்கச்சி வேற இருக்கு என்ன பண்ண போறனோ ம்ம்ம் " என்று சொல்லியபடி வந்தான். அந்த பழமுதிர்ச் சோலை இருந்த இடம் இப்போ அரசு நடத்து "டாஸ்மாக்" இருந்தது, அருகில் இருக்கும் அந்த கடையின்  வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு "இருடா ஒரு பால் பாக்கெட் வாங்கி வாரே " என்று சொல்லிவிட்டு சென்றான் .

          கடை கொஞ்சம் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது ,கடையின் முன் இருந்த பெஞ்ச்க்கு பதிலாக வட்ட மேசைகள் போடப்பட்டு அதைச் சுற்றி பிளாஸ்டிக்  சேர்கள் இருந்தன அதில் நான்கு ஐந்து பேர்  அமர்ந்து இருந்தார்கள், லேசாக மீசை  எட்டிப்பார்க்கும் வயசு அவர்களுக்கு. அதில் தலையில் கைவைத்தபடி இருந்தவன் அப்போதுதான் வாந்தி எடுத்து இருப்பான் போல ,கண்கள் சிவந்து இருந்தது. பால் பக்கெட் வாங்கிவிட்டு சரவணன் வந்ததும் நான் வண்டியை எடுத்தேன் .அப்போது தலையில் கைவைத்து இருந்த அந்த பையன் சொன்னான் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா



,,..

பின் குறிப்பு 
1.  *** - ஒரு ஆபாசமான சொல்..)
2. இது புனைவு...:)

பிரியமுடன் பிரபு..

Tuesday, August 28, 2012

பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)


                 1. 2004         


       2004 ஆகஸ்ட் 28 தேதி  காலையில் முதன் முதலாய் சிங்கப்பூரில் வந்து இறங்கினேன்(வேலைக்கான விசாவில்), அப்போ 20 வயசு. 

         2001-ல் டிப்ளமோ முடித்து பின் பெங்களூரில் இரண்டு வருடம் குப்பை கொட்டிய  பின் (ஏன் உங்க ஊருல குப்பை கொட்ட இடமில்லையான்னு கேட்கப்பிடாது  ஆமா) ஒரு முகவர் மூலம் சிங்கை செல்லும்வாய்ப்பு வந்தது. அதே முகவர் மூலம்தான் என் நண்பர்(கார்த்திக்) சிங்கைக்கு சென்றார் என்பதால் நானும் சரியென்று பணம் செலுத்தித் தயாரானேன். கொஞ்சம் பிரட்சனைக்கு பின் 2004 ஆகஸ்ட்-27 ஆம் தேதி இரவு சிங்கை பயணம் உறுதியானது. அதற்காக சென்று சென்னையில் தங்கியிருந்தபோது அந்த முகவர் "நீங்களே  விமானச்  சீட்டு எடுக்கவும் பின்னர் சிங்கையில் வந்தவுடன் அந்த பணத்தை தான் தருகிறேன்"என கூறிவிட்டார்.என்னோடு பாண்டிச்சேரியை சேர்ந்த சசிக்குமார் என்ற நண்பரும் சிங்கை செல்வதற்காக அதே முகவர்  மூலம் வந்திருந்தார். அப்போது எங்களிடம் கையில் இருந்த எல்லா பணத்தையும் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு விமானநிலையம் வந்துவிட்டோம். எல்லாம் முடிந்து உடன்வந்திருந்த அப்பா,மாமா இருவரிடமும் விடைபெற்று செல்லும் நேரத்தில் என் மாமா தன் பட்டாபட்டி டாயரில் இருந்து 10 ,௦௦௦  ரூபாய் யை எடுத்து என் கையில் கொடுத்தார். 

 2. 2006
          சிங்கப்பூர்  பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, சில மாதங்களுக்கு முன் அங்கு வேலைக்குச் சென்ற நண்பர் கார்த்திக்- தவிர வேறு யாரையும் தெரியாது , 
என்ன மொழி? 
எப்படிப்  பட்ட மக்கள்?
வாழும் முறை என்ன ? என எதுவும் தெரியாது. 
முகவருக்கு செலுத்திய பணம் என்பது எங்களுக்கு மிக மிக  பெரிய தொகை  கிட்டதட்ட முழுத்தொகையும் என் உறவுகள் கொடுத்ததுதான் அதில் எங்கள் பங்கு வெறும்10 %  மட்டுமே. எல்லாம் என் மீதான அவர்களின் நம்பிக்கை. எந்த பிரச்சனையும் இன்றி வேலை செய்து கடனை அடைக்கணும். வீட்டு அரவணைப்பிலேயே  வளர்ந்தவன்  நான் பெங்களூரில் வேலை பார்த்த போதே வீடு/ஊரு நினைவுகள் வாட்டி எடுக்கும் அப்படி இருக்க வெகுதொலைவில்  வெளிநாட்டில் அடுத்த 2 வருடங்கள்  கழிக்கணும் இப்படியாக பல எண்ணங்களுடன்  விமானப் பயணம்  முடிந்து சிங்கப்பூரில் வந்து இறங்கினேன். எங்களை வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்து செல்ல முகவர் வந்து இருந்தார்  அவர்களோடு ஒரு டக்ஸ்யில் புறப்பட்டோம், "சிங்கப்பூர்  உங்களை அன்புடன் வரவேற்கிறது" - என்று தமிழில் எழுதியிருந்ததை படித்தபடி விமான நிலையம் விட்டு வெளியேறினோம்.


3.2007
          சாலையின் இருபக்கமும் பச்சை பசேல் என மரங்கள், அழகான சுத்தமான சாலைகள், வாகனம் வழுக்கிக்கொண்டு செல்வது போல இருந்தது. விரைவுச்சாலையை கடந்து குடியிருப்புப்  பகுதிக்குள் வாகனம் நுழைந்த போது ஏதோ கட்டிடக் காட்டுக்குள்  வந்த உணர்வு. அதே முகவர் மூலம்  ஏற்க்கனவே இங்கே வேலைக்கு வந்த சிலர் தங்கியிருக்கு ஒரு வீட்டில் எங்கள் பெட்டியை வைத்துவிட்டு  பிறகு நாங்கள் வேலை செய்யப்போகும் இடத்தில் எங்களை அறிமுகம் செய்ய அவர் அழைத்துச் சென்றார். அன்று சனிக்கிழமை என்பதால் அறிமுகம் மட்டுமே,அது முடிந்ததும் எங்கள் கையில் ஆளுக்கு 10 வெள்ளி  கொடுத்துவிட்டு விடைபெற்றுவிட்டார்  அந்த முகவர்.அதைவைத்து ஒருநாளுக்கு சாப்பிட மட்டுமே முடியும்.

3.2009
          சிங்கப்பூரில் முதலில் நாங்க தங்கியது உட்லேண்ட்ஸ்(woodlands) பகுதிதான். எங்களை தங்கவைத்து விட்டுச்  சென்ற வீட்டில் இருந்தவர்கள்  அன்று தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வந்தபின்தான் தெரிந்தது அங்கே ஏற்க்கனவே  அளவுக்கு அதிகமாக ஆட்கள் தங்கியிருப்பதால் நாங்கள் வேறு வீட்டில் சென்று தங்க வேண்டும் என்று. அப்போது என்னிடம் என் மாமா கொடுத்திருந்த பத்தாயிரம் இந்திய ரூபாயை சிங்கை வெள்ளியாக மாற்றிய பணம் மட்டுமே இருந்தது.அந்தநேரத்தில் நாங்கள் வேலை செய்த இடத்தில் உடன்பணிபுரியும் அசோக் என்ற நண்பர்  "பெட்டியை எடுத்துகிட்டு  எங்க வீட்டுக்கு  வாங்கடா " என்று உரிமையோடு அழைத்தார். எதையும் எதிர்பார்க்காமல் எங்களை அங்கே 15 நாட்கள்  தங்கவைத்ததோடு  பிறகு வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவும் உதவி செய்தார். இதை என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னபோது "எப்பவுமே நம்ம சாமி உன் கூட வரும்டா.." என்று சொன்னார். ஆமாம் ஆமாம் இப்படியும் சில மனிதர்கள் உடன் வந்து இருக்கிறார்கள்
 
4.2010
          அந்த 2004 ஆம் ஆண்டில், 10 சிங்கப்பூர் வெள்ளிக்கு 30 நிமிடங்கள் ஊருக்கு அழைத்துத் தொலைபேச முடியும்  இப்போது அதே தொகைக்கு கிட்டதட்ட 11 மணி நேரம் பேசலாம்.(இங்கே எந்த "ராசா"-வும் அமைச்சராக இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடணும்..:)) . அன்று ஒரு சிங்கை வெள்ளி  26 இந்திய ரூபாய்  என்று நினைக்கிக்றேன் இன்று 44 இந்திய ரூபாய்.இப்படி எவ்வளவோ மாற்றம்.. என்னுள்ளும் கூட..:) . வழக்கமாக புதுவேலையிடத்தில் வரும் சிக்கல்கள்  போல் இங்கேயும் சில மாதங்க்கள்  சில சிக்கல்கள் இருந்தன பின்  இடமும்/வேலையும் பழகிப்போனது. அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன்  நெருங்கிப்பழக மாட்டேன்  எனவே  மிகக் குறுகிய நட்பு வட்டம்தான்,குடிப்பழக்கம்  உள்ளவர்களுக்கு பிரட்சனை இல்லை  ஒரு அறைக்கு புதிதாய் வந்தவுடன் அன்று இரவு ஒன்றாய் குடித்தாலே  போதும் அடுத்தநாள் முதல் மாமன் மச்சான் ஆகிவிடுவார்கள் நமக்கு அந்தத் தகுதியும் இல்ல..:). பின்னர்  உட்லேண்ட்ஸ் பகுதி நூலகம் எனக்கு நல்ல துணையாக இருந்தது, நிறைய புத்தகங்கள் நல்ல சுழல் வார இறுதி நாட்களை கழிக்க அதுவே எனக்கு நல்ல இடமாக இருந்தது .


(சசிகுமார்)

         கிரிக்கெட்  என் விருப்ப விளையாட்டு, அதென்னவோ கிரிக்கெட்  விளையாடும் போது எல்லாம் மறந்து முழு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு கார்த்திக் என்ற நண்பன் மட்டுமே தெரியும் என்ற நிலையில் சிங்கப்பூர் வந்த எனக்கு நிறைய நட்புகளை தந்ததில் இந்த கிரிக்கெட் விளையாடுக்கும் முக்கிய பங்கு. சதிஸ்,பிரபு,முருகானந்தம்,குமார்,கண்ணன்,ராம்கி,சுரேஷ் என கிரிக்கெட் மூலம் நிறைய நட்புகள் கிடைத்து ஊரு/உறவு பிரிவை கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. விடுமுறை நாட்கள் என்றால் காலையில் துவங்கி சூரியன் மறையும் வரை ஒரே ஆட்டம்தான்..:)


          இங்கே வாடகை வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கும். 5 -6 பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்வோம். எல்லா வீடுகளும் ஒருவருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  எடுப்போம் பலவீடுகள் ஒருவருடகாலம் முடிந்ததும் எதாவது காரணம் சொல்லி காலி செய்ய சொல்லிவிடுவார்கள் எனவே எட்டு ஆண்டுகளில் பல வீடுகள்  மாறியாச்சு, ஒவ்வொரு முறையும் மாறும் போது ஓன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அடுத்த வீட்டுக்கு ஒன்றாக செல்வோம் இப்படியாக இத்தனை ஆண்டுகளில் பலருடன் தங்கி பேசி பழகும் வாய்ப்பு கிடைத்து நல்ல அனுபவம்.

லைப்பதிவுகள்  :  2008 ஆம் ஒரு சுபயோக சுபதினத்தில் இணையத்தில் எதையோ தேடியபோது வலைப்பதிவுகள் அறிமுகமானது விளையாட்டாக நானும் இந்த பக்கத்தை துவங்கி "ஆனாலும் காதலிக்கிறோம்" என்ற ஒரு பதிவிட்டேன்.பின்னர் வீட்டில் இருக்கும் எல்லா நேரங்களிலும் இணையம்தான். ஒரு நாள் கோவி கண்ணன் அண்ணனிடம் இருந்து  ஒரு பின்னுட்டம் வந்தது, பின் மின்னஞ்சல் மூலம் கைபேசி எண் கொடுத்து சிங்கை பதிவர் சந்திப்புக்கு வருமாறு அழைத்தார், யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் "என் தம்பி மாதிரி " என்று சொல்லும் கோவிகண்ணன்  அண்ணன் குழலி, ஜோதிபாரதி, பேசிகிட்டு இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம் என்று சொல்லும் வகையில் பேசும் ரோச்விக் அண்ணன், பார்த்த அன்றே பல நாள் பழகியவர் போல் பேசிய நட்புடன் ஜமால், நிசமா நல்லவன்(?) இப்படியாக சிங்கை பதிவர் நண்பர்கள் பலரின் நட்பும் கிடைத்து (நான் தனியாள் இல்ல ஆமா....:)).

(கோவி-குழலி)



          மொழி,வாழும் முறை, சுதந்திரம்,பாதுகாப்பு என்று எதுவும் இந்தியாவில் வேறு ஊரு/மாநிலங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கே  முழுதாய் கிடைக்குமா என்ற உறுதி இல்லாத நிலையில் ஒரு அந்நிய நாட்டில்,பல மொழி/கலாசார  மக்கள் வாழும் இடத்தில் எனக்கு எல்லாம் முழுதாய் கிடைத்தது என்றே சொல்வேன்.இன்று என் மனைவியையும் அழைத்துவந்து இங்கே வாழும் உறுதியையும் நம்பிக்கையும் இந்த சிங்கப்பூர் எனக்கு கொடுத்துள்ளது.ஏதொ  இப்போதுதான் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல இருக்கு ஆனால்  இன்றோடு சிங்கை வந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்கள்  பழைய கடன்கள் அடைத்து, குடிசையை மாடி வீடாக்கி பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஒரு நிலையையும்,அமைதியான பாதுகாப்பான ஒரு வாழ்வையும் இன்று வரை தந்துகொண்டிருக்கும் சிங்கைக்கு என் வணக்கங்களும்/நன்றிகளும் .


6.2012


பிரியமுடன் பிரபு ..:) 



சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்-2012-புகைப்படங்கள் 

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2011- புகைப்படங்கள்  பார்க்க
 
.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...