Tuesday, September 21, 2010

சாதியும் சாமியும் ..

உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை
காவலுக்கு நிக்குதய்யா


 பிரியமுடன் பிரபு ...


Monday, September 13, 2010

சாகாவரம் -நூல் (மரணத்தை நோக்கிய பயணமே வாழ்வு)


நூல் : சாகாவரம்
ஆசிரியர்: வெ.இறையன்பு இ.அ.ப
பதிப்பு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

      வெ.இறையன்பு அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை நூல்கள் வாயிலாகவும் , ஒலிபுத்தகமாகவும் படித்து/கேட்டுள்ளேன் . பிறகு அவரின் “ஆத்தங்கரை ஓரம்” நாவலை அவரின் பெயருக்காகவே வாங்கி படித்தேன்.மிகவும் பிடித்து போனது அவரின் எழுத்து

       “நான் முழுநேரப் படைப்பாளியோ தீவிரப் படைப்பாளியோ அல்ல; மக்கள் மொழியைப் பேசும் சாமானிய வழிப்போக்கன் மட்டுமே.'' – என்று ஒரு நக்கிரன் பேட்டியில் கூறியுள்ளார் . அது மிக மிக சரி . ஒரு ஞானிபோலவோ அல்லது ஆசிரியர் போலவோ நம்மைவிட்டு தள்ளி இல்லாமல் மிக நெருக்கமாக ஒரு நண்பனை போல இருக்கும் அவரின் நடை(இப்பெல்லாம் புரியாம எழுதுனாத்தான் இலக்கியமுனு சொல்லுறாக)

சாகாவரம்
     இந்த நூல் விமர்சனம் கவிஞர் இரா.ரவி எழுதி ஒரு குழும மின்ன்ஞ்சல் மூலம் எனக்கு வந்த்து( http://tamilparks.nsguru.com/-f16/---t230.htm) .  மரணம் மீது எல்லோருக்கும் பயம் இருக்கும் , ஆனாலும் நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம் தானே.. ஆனால் அதை வென்று மரணமில்லா பெருவெளியை கண்டு சாகாவரம் பெற நினைக்கும் ஒருவனின் பயணமே இந்த நூல்.

     நாயகனின் பெயர் “நசிகேதன்” – (யாராவது இதன் பொருள் என்னானு தெரிந்தல் சொல்லுங்க .) . 3 மாதத்தில் 4 நண்பர்கள் கபீர், பார்த்திபன், கோபி ரூப் குமார் மரணம் அவருக்குள் மரணபயத்தை கொடுக்கிறது. மரணம் பற்றி அறிந்துகொள்ள கொல்லிமலை செல்கிறார் , அங்கே ஒரு ஞானியைடம் கிடைக்கும் ஓலைசுவடிகளை படித்து அதன் மூலம் மரணமில்லா பெருவெளியை தேடி பயணம் செய்கிறான் . பல இடங்களை , பல மனிதர்களை தாண்டி ஒரு நாள் அந்த மரணமில்லா பெருவெளியை அடைகிறான் . அவனுக்கு முன்பே பலர் அங்கு இருக்கிறார்கள் .

      “நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம்தான் , இயங்குவதுதான் வாழ்வு, தேங்குவது சாவு “ – இதைத்தான் சொல்கிறது இந்த நூல். பல தடைகளைத்தாண்டி அவன் கண்ட அந்த பெருவெளியில் மரணம் இல்லை , எங்கு மரணம் இல்லையோ அங்கு வாழ்வும் இல்லை . ஒவ்வொருவரியும் த்த்துவம் போல் எழுதுவது இவரின் சிறப்பு. கண்டிப்பா படிச்சி பாருங்க ஒரு புது அனுபவமாக இருக்கும்

நூலில் இருந்து சில வரிகள்

“பல நேரங்களில் நம் அறியாமையைக் கூட நம்முடையது என்பதால் நாம் பத்திரப்படுத்தி விடுகிறோம்”

“பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும் போது , நாம் கொட்டையை சபிக்கிறோம் . அந்த விதையால்தான் பழம் கிடைத்த்து என்பதை உணராமல்”

“சொர்க்கம் என்பது வசதிகளை பெருக்கிக்கொள்வதில் இல்லை , தேவைகளை குறுக்கிக்கொள்வதில் உள்ளது”

“மனம் நிறையும் போது மண் கூட உண்டால் செரித்துவிடுகிறது”
“உணவின் ருசி பசியை பொறுத்தே அமைகிறது”

“வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய வடிவத்தில் வருகிறபோது மரணம் கூட திருவிழா போல”

“பழகியவர்களின் அன்பு சம்பளம் போல , பழகாதவர்களின் அன்பு புதையல் போல”

“ அழமுடியாத இடத்தில் சிரிக்கவும் முடியாது; அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்”பின் குறிப்பு : இது விமர்சனம் அல்ல பகிர்வு


*******
(15ம் தேதி பிறந்தநாள் காணும் மருத்துவர் தமிழ்த்துளி தேவன்மாயம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்  
(எத்தனை வயது என கேட்க கூடாது)
*******

பிரியமுடன் பிரபு…

.


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...