Thursday, March 28, 2013

புகைப்படம் (Photography)

(Deepavali market-little india-Singapore)


Wednesday, January 30, 2013

விஷ்வரூபம் - அரசியல் சதுரங்கம்


        

     முதலில் எதிர்ப்பு வந்தபோது இது வழக்கம்தானே என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள்,ஆனால் படவெளியீட்டுக்கு முதல் நாள் அரசே தடைவிதித்ததும்  பலருக்கும் குழப்பமாக இருந்தது ,அப்படி மோசமான கருத்தோடு படம் செய்யக்கூடியவரா கமல் ?! என்று , சினிமாவில் இருந்து வந்தவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ?!

          மத உணர்வுகளை புண்படுத்துவதாய் சொல்லி மத அமைப்புகள் தடை கேட்க அரசு தடை செய்தது , தடையினாலேயே ஆதரவு அதிகமானதுதான் நிஜம் ,குறிப்பாய் மத அமைப்பின் தலைவர் பொது மேடையில் "அப்பா-மகள் உறவை "அசிங்கமாக பேச எல்லோருக்கும் வெறுப்பே மிஞ்சியது. எந்த படம் ஒரு மதத்தை கேவலப் படுத்தும் என்று சொன்னார்களோ அந்த படம் சில இடங்களில் வெளிதாகி நல்லா ஓடத்துவங்கியது ,ஆனால் அந்த பேச்சுத்தான் மதத்தை கேவலப்படுத்தும் படி ஆனது..:(


          முதலில் இது மதம் சார்பான பிரச்சனை என்று தோன்றினாலும் பின்னர் அதன் வீரியம் அதிகமான போது இதற்க்கு வேறு முகம் இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் வந்தது.,ஜெயா டீவி-திரைப்பட உரிமை என்று பேச்சு அடிபட இதில் மதம் அல்ல பிரச்சனை அரசியல் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். 


தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, "வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்" என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.-கருணாநிதி

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/30/tamilnadu-karunanidhi-raises-questions-on-viswaroopam-ban-168890.html

மதம் மிக எளிதில் பற்றிக்கொள்ளக்கூடியது ,மதம் அயோக்கியர்களின் கடைசி ஆயுதம் என்பார்கள்  அப்படி வலுவான அஸ்திரம் துவக்கத்திலேயே கமல் மேல் வீசப்பட்டது .

அரசியல் சதுரங்கத்தில் மிக சாமர்த்தியமான நகர்த்தல்களில் மிக சிக்கலான இடத்தில் கமலுக்கு செக் வைக்கப்பட்டது.. தாங்கள் பகடைக்காய்கள் என்று தெரிந்தோ/தெரியாமலோ மத அமைப்புகள் ஆட , நன்றாகவே பற்றிக்கொண்டது.. வழக்கு நீதிமன்றம் போய் அரசு தரப்பு வாதம் வருகையில் இதில் இருந்த அரசியல் பல் இளித்தது.. தடை நீக்கபட்டதும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு அரசு காட்டிய அவசரம் நம்பமுடியாதது.. தடை நீங்கியும் படம் வெளியிட முடியவில்லை..:(


ஒரு படத்தின் பொருளாதார ரீதியான வெற்றி பற்றி ரசிகன் கவலைப்பட வேண்டாம்,அது தயாரிப்பாளரின் கவலை -என்பதே என் கருத்து ஆனாலும் விஸ்வரூவம் திரைக்கு வருவதே சிக்கலானதும்/தாமதமாவது கமலுக்கு பெரும் இழப்பை கொடுக்கும் .95 கோடி போடுவிட்டான் கொஞ்சம் மிரட்டினால் காலில் விழுந்துவிடுவான் என்றெ எண்ணியிருப்பார்கள்..ஆனால் இதுவரை அடிபணியவில்லை ,இப்பிரச்சனைகளுக்கு இடையேயும் தான் தரும் பேட்டிகளில் கொஞ்சம் கூட நிதானம் தவறாமல் பேசும் கமல் அவர்களை பாராட்டலாம் .


தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன். என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார். தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும். எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும். எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/i-will-go-some-other-state-or-abroad-168861.html


இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும் நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல-நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உள்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை என்றார் கமல்ஹாசன்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/kamal-sees-political-plot-against-his-movie-168863.html


50 ஆண்டுக்கு மேலாக  சினிமாவில் இருக்கும் கலைஞனை...

சரியோ தப்போ தன்னால முடிந்தவரை புதிய முயற்ச்சிகளை செய்து மாற்றுச் சினிமாவை தந்துகொண்டிருந்த கலைஞனை...

சினிமா தந்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே போட்ட கலைஞனை...

இப்பிரச்சனை காலத்திலும் தான் வரி பாக்கி இல்லாதவன்..முறையாய் வரிகட்டுபவன் என்று சொல்லும் அளவிற்க்கு நேர்மையாய் இருந்த கலைஞனை....

இப்பிரச்சனை காலத்திலும் தன் ரசிகர் கூட்டத்தை தவறாய் வழிநடத்தாத / பயன்படுத்தாத கலைஞனை...  

இந்த தமிழக அரசு இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம் ....:(





பிரியமுடன் பிரபு...

Thursday, November 29, 2012

“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?

அண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)

http://www.giriblog.com/2012/11/brahmin-cafe-controversy.html


          இது கொஞ்சம்!! தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே!
          செய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.
          திராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.
          எனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!! இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே! மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.
          தருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
          இதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.
          எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்! “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!! “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.
            எனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்கள் நடந்து கொள்வது!
          பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.
          சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்? இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே! டேய்! என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க! என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.
          லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே! இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!
          இது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.
          தான் உயர்ந்த சாதி!!! என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.


.

Thursday, November 22, 2012

நான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்தது)

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர். 

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது." 

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது." 

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன." 

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.
நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்." 

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.
மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.
-கலீல் ஜிப்ரான் 

( மொழிப்பெயர்ப்பு  யாரென்று தெரியவில்லை ,இணையத்தில் எப்போவோ படித்தது ..)


.பிரியமுடன் பிரபு 

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...