Thursday, November 29, 2012

“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?

அண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)

http://www.giriblog.com/2012/11/brahmin-cafe-controversy.html


          இது கொஞ்சம்!! தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே!
          செய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.
          திராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.
          எனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!! இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே! மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.
          தருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
          இதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.
          எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்! “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!! “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.
            எனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்கள் நடந்து கொள்வது!
          பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.
          சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்? இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே! டேய்! என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க! என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.
          லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே! இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!
          இது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.
          தான் உயர்ந்த சாதி!!! என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.


.

Thursday, November 22, 2012

நான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்தது)

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர். 

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது." 

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது." 

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன." 

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.
நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்." 

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.
மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.
-கலீல் ஜிப்ரான் 

( மொழிப்பெயர்ப்பு  யாரென்று தெரியவில்லை ,இணையத்தில் எப்போவோ படித்தது ..)


.பிரியமுடன் பிரபு 

Wednesday, November 14, 2012

தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் Deepavali - little india - Singapore)

தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் 
























பிரியமுடன் பிரபு ..
.

Tuesday, November 06, 2012

மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"

          அது ஒரு  தீபாவளிக்கு முந்தைய இரவு , அந்த அரசு பள்ளிக்கு எதிரில் இருந்த அகல்யா ரெஸ்டாரென்ட் வாசலில் வண்டியை நிறுத்தியதுமே "ஏன்டா லேட்டு" என்றான் கோபி. அவனுடன் திரு, சேகர், மணி, குமார் எல்லோரும் இருந்தார்கள்.

"என்னடா அவசரம் கை நடுங்குதோ"

"டேய் அப்புறம் பகவதி படத்துக்கு போக லேட் ஆகிடும்டா" என்று அவன் சொல்ல  நானும் சரவணனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றோம்.

          சின்ன சின்ன குடில்கள்  போல அறைகள், கதவுகள் இல்லாமல் துணியால் ஆனா  திரை தொங்கியது. முதல் அறையின் திரை விலகி இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என்று அதனுள் செல்ல முயன்ற என்னை சேகர் தடுத்தான். "நம்முது நாலாவது ரூம்மு" என்றன்,அப்போது எதிரே வந்த அந்த பெரியவரிடம் "நம்ம ரூமு ப்ரீயா இருக்கண்ணே" என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்லிச்சென்றார்.

          மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்த சிறிய அறை ரம்யமாக இருந்தது. அந்த வட்ட மேசையை சுற்றி  5 முதல் 8 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஒரு பணியாள்  வந்து என்ன வேண்டும் என கேட்டார். உணவும் மதுவகைகளும் சொல்ல கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த திரவத்தில் அப்படி என்ன இருக்கோ .. பார்த்தவுடனேயே அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. மிகச்சரியான அளவில் மது கோப்பையில் ஊற்றப்பட்டது. மது பழக்கம் இல்லாத நானும் சரவணனும் 7up உதவியுடன் அவர்களின் ஜோதியில் கலந்துகொண்டோம் .

          ஒவ்வொருவரும் ஒருமாதிரி அதைக் குடித்தார்கள்,ஒருவன் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்,ஒருவன் மெல்ல மெல்லக் குடித்தான், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாட்டுவைத்தியன் கொடுத்த கசாயத்தை குடிப்பதுபோல குடித்தான் ஒருவன். இப்படியாக குடித்தபடியே அன்று நடந்த கிரிகெட் போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அறைக்கு வெளியே இருந்து கேட்ட பேச்சுக்குரல் அனைவரின் கவனத்தையும் திருப்பியது .
" *** பெரிய இவனாட அவ(ன் ),நா இருக்கேன்டா நீ  கவல படாத, நண்ப(ன்) காதலுக்காக நா உயிரையும் கொடுப்பேன்" - என்று ஒரு குடிகாரனின் குரல் கேட்டது .

"அது குமரேசன் தானே " -என்றான் சரவணன்

"ஆமாண்டா.."

" *** அவரு நண்பே(ன் ) காதலுக்கு  உசுர கொடுப்பாராம்ல , இவனோட தங்கச்சிய அவ(ன்) நண்பன் காதலிச்ச கட்டிக்கொடுப்பானான்னு கேளுடா " என்று சரவணன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .

"சும்மா சரக்கடிச்சுட்டு உளர்றது " என்று சரவணன் மேலும் பேச
-
"டேய் , சரக்க தப்பு சொல்லாதடா  நீயெல்லாம் 7up குடிச்சு பேசுரதவிடவா நாங்க பேசிட்டோம் , நீயே சொல்லு பிரவு இவ்வளோ நேரமா இவன்தானே அதிகம்  பேசிட்டிருக்கன் ,அரைலிட்டர் 7up குடிச்சுட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு..." -என்றன் திரு .

"அரைலிட்டர் குடிச்சது போத அதிகமாகிடுச்சு போல"-என்று சரவணனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். அப்போது அவசரமாக தள்ளாடியபடியே வெளியே ஓடிய சேகர் அருகே இருந்த வாஸ் பெசனில் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது . "இப்ப தெரியுதா ஏன் நமக்கு 4 வது ரூம்னு..இங்கதான் பக்கதுலையே வாஸ் பேசன் இருக்கு " என்றன் கோபி .திரு எழுந்து சேகருக்கு உதவிக்கு போனான் .இப்படி ஒரு வழியாக குடித்து/சாப்பிட்டு முடித்து வாயில் சிலர் சிகரட்டோடும் சிலர் பீடாவோடும் வெளியேறினோம்.

          கொஞ்சம் துரத்தில் இருந்த அபிராமி தியேட்டரில் வண்டியை நிறுத்தியவுடன் டோக்கன் கொடுப்பவரிடம்

"அண்ணே படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு "

"5 நிமிசம்தான் ஆச்சு தம்பி" என்றார் அவர்

சரவணன் சிரித்தபடியே சொன்னான் "ம்கும் இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்தாலும் இதே வசனம்தா  சொல்லுவாரு இவர் ".

          டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை , நான்  7 டிக்கெட் என்று சொல்லும் போது  தியேட்டர் உள்ளே இருந்து டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்த எங்கள் ஊர் நண்பர்கள் சிலர்

"அண்ணே உள்ள பால்கேநில உட்கார இடம் இல்லை " என்றர்கள்

"இல்லாட்டி முன்வரிசைல போய் உட்காருப்பா"

"முன்வரிசைக்கா டிக்கெட் கொடுத்திங்க ? காசு அதிகம் வாங்கிட்டு முன்னடி உட்கார சொன்ன எப்படி ? மேலே எக்ஸ்ட்ரா சேர் போட்டு கொடுங்க "

"ஆமா இவருக்கு கட்டில் போட்டு கொடுப்பாங்க " என்று அவர் கடுப்பாக பதில் சொன்னார்,அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது ,அதற்குள் எங்களுக்கும் டிக்கெட் கொடுத்து இருந்தார்.

"மேலத்தான் இடம் இல்லையே ,நாங்க எங்க போக ?- என்றேன்

"முன்னாடி இடம் இருக்கு தம்பி " என்று பதில் வந்தது

"டேய் விஜய் மூஞ்சிய  மேல இருந்து பார்த்தாலே சகிக்காது , இதுல முன்வரிசைல இருந்து பார்த்த அவ்ளோதான் ,படமே பார்க்க வேணாம் டிக்கெட்ட திருப்பி கொடு" என்று என்னிடம் சொன்னான்  என் பின்னல் நின்ற சேகர் .

நான் டிக்கெட்டை திருப்பிக்கொடுத்தேன், அவர் என்னை முறைத்தார் என்னை நகர்த்திவிட்டு சரவணன் கவுண்டர் முன் நின்றன்.அவர் பதில் சொல்லாமல் காசை திருப்பிக் கொடுத்தார். "உம் முஞ்சிய பார்த்து வெளி ஊருன்னு நினைச்சுட்டான் போல" என்று என்னிடம் சொல்லியபடியே காசை சரவணன் வாங்கிக்கொள்ள எல்லோரும் வெளியேறினோம்.

"சரிடா அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா " என்றேன்

"ம்ம் உனக்கென்ன நீ குடிக்கல  உங்கப்பா கதவ திறந்து விடுவாரு ,எங்கபே ஓதப்பா(ன்)"

"அதுக்கு என்ன பண்ண ?"

"2 ஹவர்ஸ் இருந்துட்டு அப்புறம் போகலாம்.." என்று சொல்லியபடி பழமுதிர் சோலைக்கு அருகில் இருந்த டீக்கடை நோக்கி சென்றார்கள் .திரு-வை தவிர எல்லோருக்கும் போதை தலைகேறி இருந்தது .ஒரு எலும்பிச்சம் பழம் வாங்கி அவர்களின் வாயில் பிழிந்து விட்டான் சரவணன் ,போதை தெளியட்டும் என்று.திரு ஒரு சிகரெட்டை ஊதியபடி இருந்தான்

"நீயும்தானே குடிச்ச ,இவனுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ?" என்றேன் திரு-விடம் .

"ஒரு அளவு வேணாமா ?..குடிங்கடான்னா குளிக்கிரானுங்க..அப்புறம் இப்படித்தான்" என்றான்

          சேகர் மீண்டும் வாந்தி எடுத்தான் ,கண்கள் கலங்கி சிவப்பாகி இருந்தது .நேரம் செல்லச்செல்ல கொஞ்சம் போதை இறங்கியது ,தலையில் கைவைத்தபடி இருந்த சேகர் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா " என்றான், சரவணன் லேசாக சிரித்தான். பின்பு ஒருவழியாக அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குச்சென்றோம்.

         பலவருசம் கழித்து அதே போன்ற ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு ,இந்த நினைவுகளை பேசியபடி சரவணனுடன் அதே சாலையில் வண்டியில் சென்றேன்.

"அவனுங்க இன்னும் அப்படித்தாண்டா இருக்கனுங்க..அதுவும் அந்த சேகர் ரொம்ப மோசம்டா ,சம்பாரிக்கிறத எல்லாம் குடிச்சே காலியாக்கிடுறான், பாவம்டா அவே அப்பா அம்மா ,எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து பயிர்ல (வெற்றிலை கொடிக்கால்) மாடா உழைச்சு படிக்கவச்சாங்க , வயசான காலத்துல பையன் காஞ்சி ஊத்துவான்னு ம்ம்ம்ம் எங்க இன்னும் அவங்க சொத்துக்கு அவங்க வேலசெஞ்ச்சாத்தான் வழி,ஒரு தங்கச்சி வேற இருக்கு என்ன பண்ண போறனோ ம்ம்ம் " என்று சொல்லியபடி வந்தான். அந்த பழமுதிர்ச் சோலை இருந்த இடம் இப்போ அரசு நடத்து "டாஸ்மாக்" இருந்தது, அருகில் இருக்கும் அந்த கடையின்  வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு "இருடா ஒரு பால் பாக்கெட் வாங்கி வாரே " என்று சொல்லிவிட்டு சென்றான் .

          கடை கொஞ்சம் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது ,கடையின் முன் இருந்த பெஞ்ச்க்கு பதிலாக வட்ட மேசைகள் போடப்பட்டு அதைச் சுற்றி பிளாஸ்டிக்  சேர்கள் இருந்தன அதில் நான்கு ஐந்து பேர்  அமர்ந்து இருந்தார்கள், லேசாக மீசை  எட்டிப்பார்க்கும் வயசு அவர்களுக்கு. அதில் தலையில் கைவைத்தபடி இருந்தவன் அப்போதுதான் வாந்தி எடுத்து இருப்பான் போல ,கண்கள் சிவந்து இருந்தது. பால் பக்கெட் வாங்கிவிட்டு சரவணன் வந்ததும் நான் வண்டியை எடுத்தேன் .அப்போது தலையில் கைவைத்து இருந்த அந்த பையன் சொன்னான் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா



,,..

பின் குறிப்பு 
1.  *** - ஒரு ஆபாசமான சொல்..)
2. இது புனைவு...:)

பிரியமுடன் பிரபு..

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...